சூர்யாவின் ரெட்ரோ.. 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கே
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். மெகா ஹிட்டாகியிருக்க வேண்டிய படத்தை கார்த்திக் வேறு மாதிரி ட்ரீட்மெண்ட் செய்து சொதப்பிவிட்டாரே என்றும் குரல்கள் கேட்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யா நடித்த திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி ஹிட்டானது எதுவென்று அவரது ரசிகர்களிடம் சென்று கேட்டால் கண்டிப்பாக அவர்களால் உடனடியாக பதிலளிக்க முடியாது. ஏனெனில் கங்குவா, எதற்கும் துணிந்தவன் என வரிசையாக தோல்வி படங்களையே கொடுத்திருக்கிறார். அதிலும் கங்குவா படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மறக்காது. ரிலீஸுக்கு முன்பாக படக்குழுவினர் ஏற்றிவிட்ட ஹைப்புக்கு இணையாக ஒரு விழுக்காடுகூட படத்தில் விஷயமே இல்லை என்பதுதான் பலரது விமர்சனமாக இருந்தது.

கார்த்திக்குடன் கூட்டணி: அந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து 2டி நிறுவனம் சார்பில் தயாரித்தார்கள். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடிக்க; சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படமானது உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு நேற்று முன்தினம் (மே 1) திரையரங்குகளில் வெளியானது.
எப்படி இருக்கு படம்?: முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்திருப்பதன் காரணமாகவும்; இதுவும் ஒரு கேங்ஸ்டர் பற்றிய கதை என்பது ட்ரெய்லரில் உறுதியானதாலும் பெரிய ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். அதிலும் இத்தனை வருடங்களாக ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுக்காத சூர்யாவை காப்பாற்ற வந்த தேவதூதன் கார்த்திக் சுப்புராஜ்தான் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை.
படத்தில் என்ன பிரச்னை?: படத்தின் ஆரம்ப காட்சிகள் வரும் சிறிது நேரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அருமையாக கொண்டு சென்றிருந்தார். ஆனால் போகப்போக கதை மற்றும் மேக்கிங்கின் ட்ராக் மாற ஆரம்பித்தது. அதன் காரணமாக படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் இருந்த எனர்ஜி அதற்கு பிறகு ரசிகர்களிடம் எங்கே போனது என்றே தெரியவில்லை. முதல் பாதியை போலவே இரண்டாவது பாதியிலும் சொதப்பி வைக்க; விட்டால் போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம் என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அதையும் ரசிக்க விடவில்லை: முக்கியமாக படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. எனவே பாடலை அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார்கள் என்ற நோக்கத்தில் சென்ற ரசிகர்களுக்கு அந்த ஏரியாவிலும் குண்டை வைத்துவிட்டார் கார்த்திக். படத்தில் அந்தப் பாடலில் பாதியை காண முடியவில்லை. படத்தை பொறுத்தவரை இரண்டே ஆறுதல்கள்தான் ஒன்று கேமர இன்னொன்று சந்தோஷ் நாராயணனின் இசை என்று ஓபனாகவே ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்படி படத்துக்கு ஏகப்பட்ட பேர் தங்களது மைனஸ் விமர்சனத்தையே அதிகம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு சின்ன திருப்தி ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது கங்குவாவைவிடவும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற ஆரம்பித்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் மொத்தமாக அப்படம் உலக அளவில் 46 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











