Retro: கங்குவாவை எல்லாம் கண்டுக்காத ரசிகர்கள்.. சூர்யாவுக்காக அனல் பறக்கும் ரெட்ரோ புக்கிங்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பான் இந்தியா நடிகர்களை வைத்து உருவாக்கிய மெகா பட்ஜெட் கங்குவா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடிவாங்கிய நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இனிமேல் தியேட்டர் மார்க்கெட் பெரிதாக கைகொடுக்காது என கடுமையான பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதையெல்லாம் சுக்குநூறாக ரெட்ரோ படம் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 27ம் தேதியே டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகள் மட்டுமின்றி மாலை நேர காட்சிகள் வரை டிக்கெட்டுகள் அனல் பறக்க விற்றுத் தீர்ந்துக் கொண்டிருக்கின்றன.

சீயான் விக்ரமின் வீர தீர சூரன் படத்துக்கு முதல் நாளே ரிலீஸ் சிக்கல் இருந்த நிலையில், வசூல் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால், சூர்யா படத்துக்கு அவரது ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர்.
உங்களால் தான் நான்: சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று முடிந்த ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக மேடை ஏறி பேசிய நடிகர் சூர்யா ரசிகர்களால் தான் எப்போதுமே சந்தோஷமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவர்கள் கொடுத்து வரும் அன்புக்கு தலை வணங்குகிறேன் என பேசியிருந்தார். நடிகராக பெருமைப்படுவதை தாண்டி அகரம் அறக்கட்டளையை நடத்தி பல மாணவர்களை படிக்க வைத்து வருவதை நினைத்து தான் பெருமைப்படுவதாக பேசியிருந்தார்.
எல்லாமே வொர்த்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே, 2வது பாடலான கனிமா, படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என இதுவரை வெளியான எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என்றும் ரசிகர்களை தாண்டி மக்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து படத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏகப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்: வரும் வியாழக்கிழமை மே 1ம் தேதி பொதுவிடுமுறை என்பதால் ஆரம்பத்திலேயே 9 மணி காட்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமானது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக மாறியுள்ளன. தனி திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங் சிறப்பாகவே உள்ளன. இன்று மற்றும் நாளைக்குள் அதிகபட்சம் 80 சதவீதம் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கங்குவாவை கண்டுக்கல: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் தோல்வியை தழுவிய நிலையில், அதன் காரணமாக டிக்கெட் புக்கிங்கில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் சூர்யா ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ரெட்ரோ படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கின்றனர் என்பது அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்கிலேயே தெரிவதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 2 லட்சத்து 22 ஆயிரம் லைக்குகள் புக் மை ஷோவில் ரெட்ரோ படத்துக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











