சும்மா பறந்து பறந்து அடிக்கும் சூர்யா 42 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்ட் வீடியோ!
சென்னை: சூர்யா 42 படத்தின் கதாநாயகியான திஷா பதானி சண்டை பயிற்சி செய்யும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது சூர்யா 42க்காகவா எனவும் பேசிவருகின்றனர்.
கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சூர்யா. ஆரம்பத்தில் திணறிய சூர்யா பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் என்ற இடத்திலிருந்து சிறந்த நடிகர் என்ற இடத்திற்கு நகர்ந்தார். அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. அதேசமயம் ஹரி இயக்கத்தில் அவர் நடித்த சிங்கம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்து கமர்ஷியல் ஹீரோ என்ற இடத்தில் சூர்யாவை வலுவாக அமரவைத்தது. தொடர்ந்து சிங்கம் 2வும் ஹிட்டடிக்க சூர்யாவுக்கு ரசிகர் வட்டமும் பன்மடங்கு பெருகியது.

தேசிய விருது வென்ற சூர்யா
இப்படி கமர்ஷியல் படங்கள் பக்கம் கவனம் செலுத்திவந்த சூர்யா ஒருகட்டத்தில் சிறப்பான கதையம்சம் உள்ள படங்களிலும் தனது கவனத்தை திருப்பினார். அப்படி அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்தார். எளியவர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவுடைய ஒருவரின் கதையாக உருவாகி அமேசான் ப்ரைமில் வெளியானது. முன்னணி நடிகர் ஒருவரின் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது அதுவே முதல்முறையாகும். அப்படி வெளியாகி படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது.

ஜெய்பீமாக முழங்கிய சூர்யா
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் படத்தில் நடித்தார் சூர்யா. இருளர் இன மக்களின் வலியையும், வாழ்வியலையும் பேசிய அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், விவாதத்தையும் கிளப்பியது. அந்தப் படத்துக்கு பிறகு சூர்யா எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அதன்படி பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார்.

சிவாவுடன் கூட்டணி அமைத்த சூர்யா
அதேசமயம் சிவா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு ஷூட்டிங் நடந்துவரும் இந்தப் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறான எம்.எஸ். தோனி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பான் இந்தியா படமாக உருவாகும் சூர்யா 42ல் இவர் நடிப்பதன் மூலம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அறிமுகமாகிறார்.

திஷா பதானியின் ஸ்டன்ட் வீடியோ
இந்நிலையில் திஷா பதானி சண்டை பயிற்சி செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் பலவிதமான ஸ்டண்ட்களை மேற்கொள்ளும் திஷா, சுவற்றில் கால் வைத்து பறந்து பறந்து சண்டை செய்கிறார். முன்னதாக, திஷா பதானி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தவர். தற்போது அவரது இந்த ஆக்ஷன் வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சண்டை பயிற்சி சூர்யா படத்துக்காகவா?
இதற்கிடையே விறுவிறுப்பாக நடந்து வரும் சூர்யா 42 படப்பிடிப்பில் சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், ஜிம் ஒன்றில் சூர்யாவுடன் 50 பேர் மோதுவது போன்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே திஷா பதானியின் இந்த சண்டை பயிற்சியானது ஒருவேளை சூர்யா 42 படத்துக்காக இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முணுமுணுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











