டைட்டில் பஞ்சாயத்து...விட்டுக்கொடுக்க ஏகாதசி மறுப்பு.. 'அருவா'வை மாற்றுகிறதா சூர்யா- ஹரி கூட்டணி?
சென்னை: 'அருவா' டைட்டிலை விட்டுக்கொடுக்க இயலாது என்று இயக்குனரும் பாடலாசிரியருமான ஏகாதசி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சூரரைப் போற்று படத்தை அடுத்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருக்கு 39 வது படம்.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

தீபாவளி ரிலீஸ்
படத்துக்கு 'அருவா' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஒரே கட்டமாக படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. வழக்கமாக ஹரி படங்களில் அரிவாளுக்குப் பஞ்சமிருக்காது. அவரது பெரும்பாலான படங்களில் அரிவாள் இடம்பெறும்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் இந்தப் படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்ததை ரசிகர்கள் கிண்டலாக வரவேற்று இருந்தன. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா, கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

டைட்டில் சிக்கல்
சூர்யாவும் ஹரியும் ஏற்கெனவே 5 படங்களில் இணைந்துள்ளனர். இது அவர்கள் கூட்டணியில் 6வது படம். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடலாசிரியர் ஏகாதசி, 'அருவா' என்ற டைட்டிலில் ஏற்கெனவே படம் இயக்கியுள்ளார். அந்த படத்தை இயக்குனர் தருண் கோபி தயாரித்துள்ளார்.

திரைப்பட விழாக்கள்
இந்தப் படம் ரிலீசாகவில்லை என்றாலும், பெர்லின், லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் ஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் உருவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ஏகாதசியிடம் கேட்டபோது, 'கடந்த சில மாதங்களாக இந்த டைட்டில் பற்றிய அறிவிப்பு ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இருந்தும் அதே டைட்டிலை அவர்கள் படத்துக்கு வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மீண்டும் தலைப்பு பிரச்னை
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தருண் கோபி, டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விவகாரம் பற்றி அவர் பேசிவருகிறார். இதை விட்டுக்கொடுக்கும் எண்ணமில்லை' என்றார். கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழ் சினிமாவில் அதிமாக டைட்டில் பிரச்னை ஏற்பட்டது. இப்போது மீண்டும் தலைப்பு பிரச்னை ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











