சூர்யா -பாலா காம்பினேஷன் படம்... ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி கொடுத்த படக்குழு!
கன்னியாகுமரி : சூர்யாவின் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்கள் அடுத்தடுத்த வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது. இதையடுத்து அவரது அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரது அடுத்தப்படத்தின் சூட்டிங் இன்று துவங்கியுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது ஜெய்பீம் படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ரிலீசானது. இதேபோல முன்னதாக சூரரைப் போற்று படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

எதற்கும் துணிந்தவன் படம்
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் 3 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். படத்தை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது.

வாடிவாசல் டெஸ்ட் சூட்
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான செயல்பாட்டை கதைக்களமாக கொண்டு வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெற்றிமாறனுடன் சூர்யா இணையும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் சென்னையில் நடைபெற்றது.

பாலா -சூர்யா படத்தின் சூட்டிங்
இந்நிலையில் தற்போது இயக்குநர் பாலாவின் கூட்டணியில் சூர்யா இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

3வது முறையாக கூட்டணி
நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா -பாலா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் படத்தில் ஜோதிகா 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ஜோதிகாவுடன் 3 ஹீரோயின்கள்
படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கேரக்டரில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் படத்தில் ஜோதிகாவுடன் மூன்று ஹீரோயின்கள் உள்ளதாகவும் அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











