பிப்ரவரி 24ல் சூர்யாவின் '24' டீசர்?
சென்னை: சூர்யா நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் 24 படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சான், மாஸ் படங்கள் கவிழ்த்ததில் தனது அடுத்த அடியை மிகவும் கவனமுடன் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருக்கிறார்.
கடந்த வருடம் வெளியான பசங்க 2 வெற்றிப்படமாக மாறிய போதிலும் சூர்யா அதில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்துக் கொடுத்திருந்தார்.
இதனால் ஹீரோவாக ஒரு மாஸ் வெற்றியைப் பெறுவதில் மட்டுமே தற்போது சூர்யாவின் ஒட்டுமொத்த கவனமும் அடங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் டீசரை வருகின்ற 24 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.
அலை, யாவரும் நலம் படங்களுக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படம் அறிவியல் கலந்த திகில் கதையாக உருவாகி இருக்கிறது.

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் சமந்தா. சமந்தாவைத் தவிர மற்றொரு நாயகியாக நித்யா மேனனும் படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் மொத்தம் 3 சூர்யா என்றும் இவர்களில் ஒருவர் வில்லனாக மிரட்டி இருப்பதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதே போன்று டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











