சூர்யாவோட நீண்ட நாள் கனவு விக்ரம் படம் மூலமா நிறைவேறியிருக்கு.. என்னன்னு தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது விக்ரம் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டியுள்ளார் சூர்யா. இதுவரை இல்லாத வகையில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்துள்ளார்.
படத்தில் சூர்யாவின் கேரக்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. தொடர்ந்து இரு தினங்கள் அவர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தொடர்ந்து பல ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகின. இந்தப் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையிலும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன. விமர்சனங்களும் சிறப்பாக அமைந்தது.

எதற்கும் துணிந்தவன் படம்
தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார் சூர்யா. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான இந்தப்படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். படத்தில் பிரியங்கா மோகன் சூர்யாவிற்கு ஜோடியாகியிருந்தார். படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

சூர்யா41 படத்தில் சூர்யா
இந்தப் படத்தையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்களில் கோவாவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்த மாதத்தில் 34 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான ரோலக்ஸ் கேரக்டர்
இதனிடையே கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி, காயத்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான விக்ரம் படத்தில் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அவர் சில நிமிடங்களே வந்தாலும் மிரட்டியிருந்தார்.

விக்ரம் 3க்கான லீட்
இந்த கேரக்டர் விக்ரம் 3க்கான லீடாக படத்தில் அமைந்திருந்தது. விக்ரம் 3 படம் குறித்து ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்தப் படத்தையும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்கவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களை போலவே துணை கதாபாத்திரங்களிலும் சிறப்பான பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
சூர்யாவின் கனவு
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதுபோன்ற மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க வேண்டும் என்று சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த பேட்டியின் வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பேட்டியில் தொகுப்பாளர் டிடியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கும் வகையில் உள்ளது.

சூர்யா கேள்வி
ஒரே நாயகனை மையமாக கொண்டே படங்கள் வெளியாவது குறித்தும் அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார். முன்னணி ஹீரோக்கள் ஏன் இணைந்து நடிப்பதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான்கைந்து ஹீரோக்கள், ஹீரோயின்கள் இணைந்து நடிப்பது குறித்தும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
Recommended Video

விக்ரம் மூலம் நிறைவேறிய கனவு
இந்நிலையில் தற்போது அவரது இந்தக் கனவு விக்ரம் படத்தில் நிறைவேறியுள்ளது என்று கூறலாம். அவருடன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தில் அவர் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது கேரக்டர் தொடர்ந்து பேசப்பட்டு வருவதும் சிறப்பானது.


Click it and Unblock the Notifications











