சூர்யாவின் டாப் 10 படங்கள்... ஒரு பார்வை!
இன்று பிறந்த நாள் காணும் நடிகர் சூர்யா, 17 ஆண்டுகளில் 35 படங்கள் நடித்துள்ளார். இவற்றில் 5 படங்களில் அவர் ஏற்றது கவுரவ வேடங்கள்.
மீதி 30 படங்களில், பெருமளவு வெள்ளி விழா, நூறு நாள் மற்றும் முதலுக்கு மோசமில்லாத படங்கள் என்பதால்தான் இன்று அவர் பாக்ஸ் ஆபீசில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
அவரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்த டாப் 10 படங்களை இங்கே பார்க்கலாம்.

நந்தா
தன் முதல் படமென்று சூர்யா பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் பாலாவின் இந்த நந்தா படத்தை. இந்த பாத்திரத்துக்கென்றே தனி உடல் மொழியை உருவாக்கியிருந்தார் பாலா. அதை சூர்யா தவிர வேறு யாராவது இத்தனை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

மவுனம் பேசியதே
வன்முறையையும் கோபத்தையும் இத்தனை அமைதியாகக் கூட காட்ட முடியுமா என்று கேட்க வைத்த பாத்திரம் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு. நந்தா முடித்த கையோடு அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த பெரும் வெற்றிப் படம் இது.

காக்க காக்க
கவுதம் மேனன் இயக்கத்தில் அன்புச் செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா வாழ்ந்த படம் இது. வசூலில் சாதனை புரிந்த இந்தப் படத்தைப் பாராட்டாத காவல்துறை அதிகாரிகளே இல்லை எனலாம்.

பிதாமகன்
இதுவும் பாலா இயக்கிய படம்தான். சூர்யா என் மகன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவகுமார், நான் சூர்யாவின் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிட்ட படம் இந்த பிதாமகன். படத்தில் விக்ரமுக்கும் சூர்யாவுக்கும் நடிப்பில் அப்படியொரு போட்டி இருக்கும். இருவருமா சமமாக வென்றிருப்பார்கள் அந்தப் போட்டியில். இப்போது நினைத்தாலும், அந்த சக்தி என்ற லங்கர் கேரக்டரை மறக்கத்தான் முடியுமா!

கஜினி
ஏஆர் முருகதாசும் சூர்யாவும் இணைந்த மாபெரும் வெற்றிப் படம் கஜினி. ஆங்கிலப் படத்தின் சாயல் என்றாலும், அதை இந்தியத் தன்மை நிலவக் காரணமாக இருந்தது சூர்யாவின் அசாத்திய நடிப்பு. பெரும் தொழிலதிபர் - குறுகிய நினைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி என இருவேறுபட்ட பாத்திரங்களை அத்தனை சிறப்பாகச் செய்திருந்தார் சூர்யா.

வாரணம் ஆயிரம்
இந்தப் படத்தை பெரும் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், நடிப்பில் சூர்யாவை அடுத்த தளத்துக்கு இட்டுச் சென்ற படம் என உறுதியாகச் சொல்லலாம். கவுதம் மேனன் - சூர்யா இணை என்றாலே வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற தோற்றம் உருவாகக் காரணமாக அமைந்த படம் இது.

அயன்
கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏவி எம் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ஆக்ஷன் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்தது என்றால் மிகையல்ல. காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தார் சூர்யா.

சிங்கம்
ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்த பக்கா கமர்ஷியல் படம் சிங்கம். விறுவிறு திரைக்கதை காரணமாக, லாஜிக்கை மறந்து ரசிகர்களை நாற்காலியில் கட்டிப் போட்ட படம் சிங்கம்.

ஏழாம் அறிவு
முருகதாசும் சூர்யாவும் இணைந்த இரண்டாவது படம். கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலைப் பெற்ற படங்களுள் ஒன்றாக வைக்கப்பட்டது இந்தப் படம். போதி தர்மர் வேடத்தில் அத்தனை சிறப்பாக நடித்திருந்தார் சூர்யா.

சிங்கம் 2
சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமை சிங்கம் 2-க்கு உண்டு. அதைவிட முக்கியம், இந்த ஆக்ஷன் படத்தை குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் பார்த்து ரசித்ததுதான். ரஜினிக்குப் பிறகு குடும்ப ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு வரவழைத்த பெருமை இந்தப் படத்துக்கே!


Click it and Unblock the Notifications











