பாலா அண்ணா ஆக்ஷன் சொல்றதுக்காக 18 வருஷம் காத்திருந்தேன்... இந்த ஹீரோ சொல்றத கேளுங்க!
சென்னை :நடிகர் சூர்யா -பாலா காம்பினேஷனில் புதிய படத்தின் சூட்டிங் இன்றைய தினம் குமரியில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சூட்டிங் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி போஸ்ட்டை பதிவு செய்துள்ளார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த ஹிட்கள் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிய நிலையிலும் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதையடுத்து சமீபத்தில் அவரது எதற்கும் துணிந்தவன் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது.

எதற்கும் துணிந்தவன் படம்
இந்தப் படம் 3 ஆண்டுகள் இடைவெளியில் திரையரங்கில் சூர்யா நடிப்பில் வெளியானது. சமீப காலங்களில் சமூக அக்கறையுடன் கூடிய படங்களில் சூர்யா நடித்து வருகிறார். அந்த வகையில் எதற்கும் துணிந்தவன், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

தொய்வில்லாத திரைக்கதை
படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் காட்சி அமைப்புகளை பாண்டிராஜ் சேர்த்திருந்தார். காமெடி, சென்டிமெண்ட் என கமர்ஷியல் அம்சங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. காட்சி அமைப்புகளில் தொய்வில்லாத வகையில் படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார் பாண்டிராஜ். அவரின் முந்தைய படங்களில் இருந்து இந்தப்படம் மாறுபட்டு இருந்தது.

பாலா இயக்கத்தில் சூர்யா
இதனிடையே அடுத்ததாக நடிகர் சூர்யா, பாலாவின் இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் குமரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து பின்னர் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா மகிழ்ச்சிப் பதிவு
இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கவுள்ளார். இதனிடையே இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது குருநாதர் பாலா அண்ணா ஆக்ஷன் சொல்வதற்காக தான் 18 ஆண்டுகாலம் காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் 41வது படம்
மேலும் இந்த தருணத்தில் தனது மகிழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அனைவரது வாழ்த்துக்களும் இந்தப் படத்திற்கு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 41வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறனுடன் சூர்யா இணைந்துள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

3வது முறையாக இணையும் கூட்டணி
நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் பாலாவுடன் இணைந்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படங்கள் சூர்யாவின் கேரியரில் சிறந்த படங்கள் லிஸ்டில் உள்ளன. மிகப்பெரிய அதிர்வலைகளை இந்தப் படங்கள் ஏற்படுத்தின. இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











