சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. சிபிஐ விசாரிக்கும்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டார்.
மன அழுத்தம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர்.

மரணத்தில் சந்தேகம்
ஆனால், அவரது அறையில் தற்கொலை கடிதம் ஏதும் சிக்காத நிலையில், இது ஏன் கொலையாக இருக்கக் கூடாது என்ற சந்தேகத்தை சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்கள் கிளப்பினர். மேலும், அவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் என்றும், காதலி ரியா சக்கரவர்த்தி என்றும் பல வித சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

மும்பை போலீசார் மீது குற்றச்சாட்டு
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், மகராஷ்ட்ரா அரசு அதற்கு தடையாக இருந்து வந்த நிலையில், பிகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை போட்டிருந்தது.

சிபிஐ விசாரணை
இந்நிலையில், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப் படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மும்பை போலீசார் சமீபத்தில் பட்னா போலீசாரை வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், மும்பை போலீசாருக்கும், பீகார் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரியா சக்கரவர்த்தி கோரிக்கை
மேலும், பீகார் போலீசார் தன்னை விசாரிக்கக் கூடாது என்றும், அந்த வழக்கை மும்பை போலீசார் விசாரிக்கும் படி மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்கரவர்த்தியின் கோரிக்கை விசாரிக்கப் பட்டு வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கணக்கில் இருந்து பல கோடி ரூபாயை அவர் சுருட்டியதாகவும் இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும் என சுஷாந்தின் தந்தை சமீபத்தில் புகார் அளித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











