மறைந்த சுஷாந்த் சிங்கிற்குத் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தது உண்மைதான்..நடிகரின் தந்தை தகவல்!
மும்பை: சுஷாந்த் சிங் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தது உண்மைதான் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

விசாரணை
அவர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, மற்றும் சுஷாந்தின் நண்பர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

வாழ்க்கை கதை
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. இதை இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை நிகில் ஆனந்த் இயக்க இருக்கிறார். இதற்கிடையே சுஷாந்த் சிங், அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார் என்பது உண்மைதான் என்று சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தெரிவித்துள்ளார்.

ரியா சக்கரவர்த்தி
இந்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் எதையும் வெளிப்படையாக பேசுபவராக இருந்தார் சுஷாந்த், கடந்த சில வருடங்களாக முன்பு போல இல்லை. சுஷாந்தின் காதலி என்று கூறப்படும் ரியா சக்கரவர்த்தி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அங்கிதா லோகண்ட் பற்றி எனக்குத் தெரியும்.

கடைசி பேச்சு
அங்கீதா, பீகாரில் உள்ள எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறார். (டிவி நடிகை அங்கிதாவும் சுஷாந்த் சிங்கும் 6 வருடமாக காதலித்து வந்தனர்). நடிகை கீர்த்தி சனோனையும் தெரியும். சுஷாந்துக்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தோம். இதுபற்றி கடைசியாக பேசும்போது, இந்த கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார் சுஷாந்த்.

விரும்பும் பெண்ணை
அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெளியான பிறகு, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் திருமணம் செய்வது பற்றி யோசிப்போம் என்றார். அதுதான், திருமணம் பற்றி கடைசியாக நாங்கள் பேசியது. அவர் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்து இருந்தோம். இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் யார் என்பது பற்றி அவர் சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











