மும்பை வந்தது சுஷாந்த்தின் குடும்பம்.. வீட்டில் சிக்கிய மருந்து மாத்திரைகள்.. தொடரும் விசாரணை!
பாட்னா: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் நேற்று நள்ளிரவு மும்பை வந்து சேர்ந்தனர்.
Recommended Video
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்.
கை போ சே, சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மனஅழுத்தம்
இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மருந்து சீட்டுகள்
அவரது வீட்டில் தற்கொலைக் கடிதம் ஏதும் சிக்கவில்லை. இதனால், எதற்காக நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
அதைக் கைப்பற்றியுள்ள போலீசார், அந்த மருந்துகள், அவர் சந்தித்த பிரச்னை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களை, சுஷாந்த்தின் டாக்டரிடம் விசாரிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர்
தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் பாட்னாவில் வசித்து வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையை அடுத்து, அவர் குடும்பத்தினர் நேற்றிரவு மும்பை வந்து சேர்ந்தனர். சுஷாந்த் சிங்கின் உடல் மும்பை கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு
அங்கு சென்று உடலைக் கண்ட அவர்கள் கதறித் துடித்தனர். பின்னர் அங்குள்ளவர்கள் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதிச்சடங்கு மும்பையில் நாளை நடக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











