நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட வழக்கு.. பிரபல நடிகைக்கு போலீசார் திடீர் சம்மன்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போலீசார் பிரபல நடிகைக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14- ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

மன அழுத்தம்
மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர்.

முதல் சந்திப்பு
சுஷாந்தின் காதலி ரியா கூறிய வாக்குமூலத்தில், சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே சொல்லவில்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார். திடீரென்று புனேவில் இருக்கும் பண்ணை வீட்டுக்குப் போய் தனியாக இருப்பார்' என்று கூறியிருந்தார்.

வாய்ப்பு பறிபோகிறது
சுஷாந்தின் மறைவை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. திறமையான நடிகர்களை மட்டம் தட்டி, வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இவர்களால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பது உள்ளிட்ட பிரச்னைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடக்கின்றன.

சிபிஐ விசாரணை
இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் தற்கொலையை அடுத்து நடிகை கங்கனா ரனவத், இந்தி திரையுலகை கடுமையாக சாடி இருந்தார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல என்றும், தகுதிவாய்ந்த அவரது படங்களும், அவரது நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
Recommended Video

கங்கனா ரனவத்
இந் நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக கங்கனா ரனவத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது கங்கனா, மணாலியில் இருக்கிறார். இதன் காரணமாக போலீசார் அந்த சம்மனை தபால் மூலம் அவருக்கு அனுப்பி உள்ளனர். கடந்த 3 ஆம் தேதியே அவரை மும்பைக்கு வரவழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











