Sushmita Sen: “அந்த நாட்கள் வாழ்வின் கடினமான பகுதி..” உண்மையை சொன்ன சுஷ்மிதா சென்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுஷ்மிதா சென்.
1996ல் வெளியான தஸ்தக் படத்தில் அறிமுகமான அவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார்.
தற்போது 'தாலி' என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் சுஷ்மிதா சென், தனது வாழ்வின் கடினமான பகுதி குறித்து பேசியுள்ளார்.
மேலும், அந்த கடினமான நாட்களை தற்போது கடந்து வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

வாழ்வின் கடினமான நாட்கள்: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுஷ்மிதா சென், கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார். இந்தியில் தஸ்தக் திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், நாகர்ஜுனாவின் 'ரட்சகன்' படம் வழியாக தமிழிலும் அடியெடுத்து வைத்தார். மேலும், ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் 'ஷக்கலக்க பேபி' என்ற பாடலுக்கும் ஆட்டம் போட்டு அசரடித்திருந்தார்.
அதன்பின்னர் தமிழில் அதிகம் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இந்தியில் இப்போதும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தாலி (Taali) என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சுஷ்மிதா சென். மும்பையைச் சேர்ந்த ஸ்ரீகவுரி சாவந்த் என்பவர் திருநங்கைகளுக்காகக் குரல் கொடுத்து, அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தாலி வெப் சீரிஸ் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மிதா சென், தன் வாழ்வின் கடினமான பகுதி குறித்து மனம் திறந்துள்ளார். "அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் கடினமான பகுதியாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன், அந்தக் கட்டத்தில் இருந்து, இப்போது வாழ்க்கையின் மறுபக்கத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். தற்போது அதை நினைத்து பயமில்லை என்றாலும், அதற்கு பதிலாக இன்னொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். இந்த வாழ்க்கையில் கவனத்துடன் செயல்பட உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், எப்போதும் நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது இன்ஸ்டாவில் தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும். உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து, ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது என்றும் போஸ்ட் செய்திருந்தார்.
சிகிச்சைக்குப் பின்னர் சில நாட்கள் ஓய்வில் இருந்த சுஷ்மிதா சென், அதனைத் தொடர்ந்து தற்போது தாலி வெப் சீரிஸில் நடித்துள்ளார். தனது உடல் நலம் குறித்து பகிர்ந்துகொண்ட சுஷ்மிதா சென், அதுகுறித்து ரசிகர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











