Suzhal: நொடிக்கு நொடி திருப்பம்.. சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம்.. விரைவில் படப்பிடிப்பு!
சென்னை: பலரின் பாராட்டை பெற்ற சுழல் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது
விக்ரம் - வேதா பட இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கதை உருவாக்கத்தில் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது.
இந்த தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர்.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சுழல் வெப்தொடர்: அதிரடியான பல திருப்பங்களைக் கொண்ட சுழல் தொடரில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்றின் தொழிற் சங்க தலைவராக இருக்கிறார் பார்த்திபன். அவர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். போராட்டம் நடத்திய மறுநாள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்படுகிறது. இந்த பழி பார்த்திபன் மீது விழ கைது செய்யப்படுகிறார்.
அதிரடி விசாரணை: மற்றொரு புறம் பார்த்திபனின் மகள் காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்று தெரியாமல் குடும்பமே நிலைகுலைந்து போய்விடுகிறது. அதே நேரத்தில் ஸ்ரீரேயா ரெட்டியின் மகனும் காணாமல் போக, இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீரேயா ரெட்டி, சப் இன்ஸ்பெக்டர் கதிர் ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர்.
திகிலூட்டும் தொடர்: பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும், அதனால் அவர்கள் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். திகிலூட்டும் பல திருப்பங்களுடன் எபிசோடுக்கு எபிசோடு சுவாரசியத்தை ஏற்படுத்திய இந்த வெப் தொடருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

சுழல் இரண்டாம் பாகம்: இந்நிலையில் சுழல் இணையதொடரின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது விரைவில் இந்த இணைய தொடரின் ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளது என்றும் விரைவில் இதற்கான படப்பிடிப்பு பணிகளும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











