போராட்டத்தில் மலர்ந்த காதல்.. அரசியல் தலைவரை மணந்த தனுஷ் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்!
மும்பை: நடிகர் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்வரா பாஸ்கர் சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அணி தலைவரான ஃபகத் அகமத் உடன் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
சர்ச்சைக்கு பெயர் போன ஸ்வரா பாஸ்கர் சத்தமே இல்லாமல் திடீரென பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
சினிமா பிரபலங்கள், பாலிவுட் ரசிகர்கள் என பலரும் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வரா பாஸ்கர்
34 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல்வாதியுடன் தனது திருமணத்தை நடத்தி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு வெளியான மதோலால் கீப் வாக்கிங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்வரா பாஸ்கர். அடுத்த ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான குஸாரிஷ் படம் இவரை பிரபலப்படுத்தியது. தானு வெட்ஸ் மானு, ராஞ்சனா, அவுரங்கஸிப், வீர் தி வெட்டிங் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் படத்தில்
நடிகை ஸ்வரா பாஸ்கரை நாடு முழுவதும் பிரபலப்படுத்திய படம் என்றால் அது ராஞ்சனா தான். இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்சனா படத்தில் தனுஷை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணாகவும் உற்ற தோழியாகவும் நடித்து அசத்தி இருப்பார் ஸ்வரா பாஸ்கர்.

சர்ச்சை நாயகி
கங்கனா ரனாவத்தை போல பாலிவுட்டில் போல்டாக பேசக்கூடிய நடிகையாக ஸ்வரா பாஸ்கர் மாறினார். அவரது பேச்சுக்கள் பலமுறை அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற உடன் கட்டை ஏறுதல் காட்சியை விளாசி அவர் வெளியிட்ட கண்டன கடிதம் பாலிவுட்டில் அவருக்கு பல பட வாய்ப்புகளையே இழக்கச் செய்தது.

அரசியல்வாதியுடன் திருமணம்
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இளைஞரணி தலைவர் ஃபகத் அகமத் உடன் தற்போது எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்வரா பாஸ்கர். கடந்த ஜனவரி 6ம் தேதி நீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்த நிலையில், நேற்று திருமணம் செய்து கொண்டார். கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

போராட்டத்தில் பூத்த காதல்
கடந்த 2020ல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தான் ஃபகத் அகமதை ஸ்வரா பாஸ்கர் சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், காதலிக்கத் தொடங்கினர். சில சமயங்களில் நமக்கான ஜோடியை வெளியே தேடுவோம். ஆனால், அவர்கள் நம் அருகே இருப்பதை அறிய மாட்டோம். நாங்கள் அறிந்து கொண்டோம். மண வாழ்வில் இணைந்து விட்டோம். என் இதயத்திற்குள் உங்களை வரவேற்கிறேன் என தனது காதல் கதையை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி உள்ளார் ஸ்வரா பாஸ்கர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். கூடிய விரைவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











