விபசார வழக்கு: ஸ்வேதாவுக்கு என் அடுத்த படத்தில் வாய்ப்பு- பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா
மும்பை: பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதாவுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா அறிவித்துள்ளார்.
நடிகை ஸ்வேதா பாஸு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். 'மக்தீ' என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக 2002-ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர்.
2008-ஆம் ஆண்டு, இவர் தெலுங்கில் நாயகியாக நடித்த 'கொத்த பங்காரு லோகம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், விமர்சகர்களிடையே ஸ்வேதாவிற்கு பாராட்டையும் வாங்கித் தந்தது.

கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் ஸ்வேதா பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதா கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'ஷாகித்', சிட்டி லைட்ஸ்' போன்ற படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திரைப்படத்தில் வாய்ப்பு தர இருக்கிறேன். 'மக்தீ'யில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
அவரது புகைப்படங்களை பகிர்வதை நிறுத்திவிட்டு, அவருடன் சம்பந்தப்பட்ட செல்வந்தர்களின் படங்களை வெளியிடுங்கள். செல்வாக்கு இல்லாத பெண்ணை விட்டுவிட்டு, குற்றம் செய்யக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள் என்று குமுறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











