கழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாகக் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்!
சென்னை: மாஸ்டர் பட வெளியீட்டிற்காக, ஈஸ்வரன் படத்தின் ரிலீஸை முடக்க சதி நடப்பதாக டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம், ஈஸ்வரன். இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின்.
மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த், பிச்சைக்காரன் மூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.

மாதவ் மீடியா
இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை மாதவ் மீடியா சார்பில், பாலாஜி கப்பா தயாரித்துள்ளார். இந்நிலையில் சிம்புவால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில்
புகார் கொடுத்திருந்தார். அந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வு காண வேண்டும் என அவர் கூறியதை அடுத்து, தயாரிப்பாளர் சங்கம், கியூப் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

வெளியீடு பணிகள்
அதில், ஈஸ்வரன் படத்தின் வெளியீடு தொடர்பான பணிகளை எங்கள் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் தனது வீட்டில் கண் கலங்கிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார், சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர்.

கட்டப் பஞ்சாயத்து
அவர், 'சிலம்பரசன் நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சதி செய்கிறார்கள்
இதைக் காரணம் காட்டி, டிஜிட்டல் நிறுவனங்களிடம் படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதி இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நடிகர்கள் என்றுமே பொறுப்பு ஏற்க மாட்டார்கள். மாஸ்டர் படத்துக்கு முன் ஈஸ்வரன் வெளியாகி விடக் கூடாது என்று சிலர் சதி செய்கிறார்கள்.

கழுத்தறுப்பு வேலை
நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் என் பிள்ளையின் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தற்போது வெளிவந்து இருக்கிறேன். சினிமாவில் பலர் துரோகம் செய்கின்றனர். வேறு யாரையோ வாழ வைப்பதற்காக கழுத்தறுப்பு வேலைகளில் திரைத்துறையில் பலர் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











