இதை பார்த்தால் வெற்றிமாறனை பிடிக்காமல்கூட போகலாம்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்
சென்னை: விடுதலை படத்தை பார்த்த பிறகு வெற்றிமாறனை பிடிக்காமல்கூட போகலாம் என இயக்குநரும், நடிகருமான தமிழ் தெரிவித்திருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன் பொல்லாதவன் என்ற கமர்ஷியல் படத்தை தனது முதல் படமாக கொடுத்தாலும் அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சமூக அக்கறையுடனும், டீட்டெயிலிங்கோடும் இருக்கின்றன.

நாவல், சிறுகதைகள் டூ சினிமா
நாவலையோ, சிறுகதையையோ திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழ் சினிமாவில் அரிதிலும் அரிதாகத்தான் நடக்கும்,. மகேந்திரன், பாலா போன்றோர் அந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். ஆனால் மகேந்திரன் சினிமா பெரும்பாலும் விமர்சனங்களை சந்தித்ததில்லை. ஆனால் பாலா எரியும் பனிக்காடு நாவலை பரதேசி திரைப்படமாக மாற்றியபோது அந்தத் திரைப்படம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் நாவலின் மையக்கருவையே பாலா சிதைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

வெற்றிமாறனின் அசத்தல் முயற்சி
இப்படிப்பட்ட சூழலில்தான் வெற்றிமாறன் சிறுகதைகளையோ, நாவலையோ திரைப்படமாக்கும் வேலையில் இறங்கினார். அப்படி அவர் கோவையில் ஆட்டோ ஓட்டும் சந்திரன் என்பவர் எழுதிய லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக்கினார். நாவலை அப்படியே எடுத்து வைக்காமல் தன்னுடைய பார்வையையும், அக்கறையையும் சேர்த்து காவல் துறையின் கோர முகத்தை காட்சிப்படுத்தியிருந்தார். அதுவரை காவல் துறையை புகழ்ந்து மட்டுமே வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாக்களில் வெற்றிமாறனின் விசாரணை வந்தபிறகுதான் ரசிகர்கள் காவல் துறையை விசாரணைக்குட்படுத்தினார்கள்.

வெக்கை டூ அசுரன்
அதேபோல் பூமணி எழுதிய வெக்கை நாவலை அசுரன் என்ற பெயரில் படமாக எடுத்தார். அந்தப் படத்திலும் பஞ்சமி நிலம் குறித்து பேசி சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தினார் வெற்றிமாறன். அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற சிறுகதையையும் அதே பெயரில் சூர்யாவை வைத்து படமாக இயக்கவிருக்கிறார். இப்படி தொடர்ந்து சிறுகதைகளை படமாக மாற்றுவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்கு என்பது உண்மை.

ஜெயமோகன் துணைவன் டூ விடுதலை
வெற்றிமாறன் இப்போது ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமானது மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஜெயமோகன் வலதுசாரி சிந்தனையுடையவர் என்பதால் அவருடைய சிறுகதையின் ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு தனது ஸ்டைலில் விடுதலை படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

டாணாக்காரன் தமிழ் பேட்டி
இந்நிலையில் நடிகரும், டாணாக்காரன் படத்தின் இயக்குநருமான தமிழ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "விடுதலை படத்தின் படப்பிடிப்பில் வெற்றிமாறன், 'ரொம்ப கவனமாக கையாள வேண்டிய அரசியல் இது என அடிக்கடி கூறுவார். ஒரு இன விடுதலை அரசியல் குறித்து பேசும்போது ஒவ்வொரு அடியையும் ரொம்பவே கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

ஆதரித்தவர்கள் எதிர்க்கலாம்; எதிர்த்தவர்கள் ஆதரிக்கலாம்
விடுதலை படத்தை பார்த்துவிட்டு இதுவரை வெற்றிமாறனை ஆதரித்தவர்கள்கூட எதிர்க்கலாம். எதிர்த்தவர்கள்கூட ஆதரிக்கலாம். அப்படிப்பட்ட நிலைதான் இந்தப் படத்துக்குள் இருக்கிறது. அதைத்தான் இயக்குநர் எதிர்பார்த்திருக்கிறார்" என்றார். தமிழின் இந்தப் பேட்டியை அடுத்து விடுதலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











