ஐடியில் வேலை, நல்ல சம்பளம்...ஆனால், “டாணாக்காரன் “ முருகன் சினிமாவுக்கு வந்த கதை...!
சென்னை : இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களிலும், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் முருகன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் கண்ணன் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை கூறியுள்ளார்.

டாணாக்காரன்
காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், டாணாக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையையும் ஒரு தனித்துவமான அனுபவத்தையும் வழங்கி உள்ளது. இந்த படத்தில் காவலர் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களை அப்பட்டமாக காட்டி உள்ளார் இயக்குநர் தமிழ்.

கார்த்திக் கண்ணன்
இந்த படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் கார்த்திக் கண்ணன் கனகச்சிதமாக நடித்திருந்தார். விக்ரம் பிரபுவின் நடிப்பு எவ்வளவு பேசப்படுகிறதோ அந்த அளவுக்கு முருகனின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறது. டாணாக்கரன் படத்தில் நடித்த அனுபவத்தை கார்த்திக் கண்ணன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

மொட்டை வெயிலில்
டாணாக்காரன் படத்தின் படப்பிடிப்பு வேலூரில் நடந்தது. வேலூரில் எப்போதுமே வெயில் அதிகமாக இருக்கும், காலையில் வெயிலில் ஓடத் தொடங்கினோம் என்றால், மாலை வரை மொட்டை வெயிலில் ஓடிக்கொண்டே இருப்போம். நாங்கள் பட்ட எல்லா கஷ்டத்திற்கும் தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு, படம் நல்லா இருக்கு என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கு என்றார்.

ஐடி வேலையை விட்டுவிட்டேன்.
நான் முதலில் ஐடியில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போவேன். அப்போது தான் இந்த படத்தின் உதவி இயக்குனர் என்னைப் பார்த்துவிட்டு நடிக்க கூப்பிட்டார். எனக்கும் நடிக்க ஆர்வம் இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். படத்தில் நடிக்க இருந்ததால் ஐடி வேலையை விட்டுவிட்டேன் அதற்கு பிறகு இயக்குனர் தமிழுடன் அறிமுகம் ஏற்பட்டது. டாணாக்காரன் நிச்சயம் எனக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தரும் என்றார் கார்த்திக் கண்ணன்.


Click it and Unblock the Notifications











