'இந்த லாக்டவுனில் பசியோடு யாரும் தூங்கக் கூடாது..' 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகை தமன்னா உதவி!
சென்னை: தொண்டு நிறுவனம் உதவியுடன் மும்பையில், தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நடிகை தமன்னா உதவி செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளுக்கும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

சினிமா தொழிலாளர்கள்
இந்த லாக்டவுன் காரணமாக தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டியது. தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக புதிய அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

நடிகைகள்
இதற்கு நடிகர்கள் உதவி வந்தனர். சில கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் உதவவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து நடிகைகள் நயன்தாரா, காஜல் அகரவால் உள்ளிட்ட சில நடிகைகள் உதவி செய்தனர். நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு சினிமா அமைப்புக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கும் மகாராஷ்ட்ரா மாநில நிவாரணத்துக்கும் நிதி அளித்தார்.

தொழிலாளர்கள்
நடிகை தமன்னாவும் தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமன்னா தமிழ், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் தெலுங்கு சினிமா அமைப்புக்கு மட்டும் நிதி உதவி அளித்தது, தமிழ் சினிமா அமைப்பினர் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள், சுமார் 10 ஆயிரம் பேருக்கு உதவி செய்துள்ளார்.

உணவு பொருட்கள்
மும்பையின் குடிசை பகுதிகளில் வாழ்பவர்கள், முதியோர் இல்லம், தினசரி சம்பளம் வாங்கும் ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனம் உதவியுடன் 50 டன் உணவு பொருட்கள் வழங்கியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வைரஸ் தொற்றால், கற்பனைக்கு எட்டாத வகையில், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பசியோடு தூக்கம்
இயல்பு நிலை திரும்ப மாதங்கள் ஆகலாம். இதனால் தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் Letsallhelp.org என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து யாரும் பசியோடு தூங்கக் கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன். அவர்களுக்கு உதவி வருகிறேன். அதனால் தாராளமாக நன்கொடை அளியுங்கள்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











