பாலிவுட்டை ஆட்டிப் படைக்கும் நெப்போடிசம் பிரச்சனை.. தனது கருத்தை வெளியிட்டார் நடிகை தமன்னா!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் தான் காரணம் என காரசாரமான விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகை தமன்னா தனது கருத்தைக் கூறியுள்ளார்.
Recommended Video
15 வயதிலேயே பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 15 வருடத்துக்கும் மேலாக நடித்து வருகிறார் தமன்னா.
பாலிவுட்டில் அறிமுகம் ஆனாலும், தொடர்ந்து அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் அறிமுகம்
இயக்குநர் சபா சாம்சி இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சாந்த் சா ரோஷன் சேஹ்ரா படத்தில் ஜியா எனும் ரோலில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழில் நாயகியாக அறிமுகமானார் தமன்னா.

சொந்த முயற்சியால்
பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் பிரச்சனை குறித்து பேசிய நடிகை தமன்னா, மும்பையில் இருந்து தென்னிந்தியாவுக்கு வரும் போது, தனக்கு யாருமே வாய்ப்புகளை பெற்றுத் தரும் அளவுக்கு உதவி செய்யவில்லை என்றும், தனது சொந்த முயற்சியிலேயே தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின் அந்தஸ்த்தை பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் பாலிவுட்டில்
அயன், பையா, வீரம், பாகுபலி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நாயகியாக மாறிய நடிகை தமன்னா, மீண்டும் 2014ம் ஆண்டு ஹம்ஷகல்ஸ் எனும் பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகும் அவருக்கு பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான காமோஷி இந்தி படத்திலும் தமன்னா நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு பாலிவுட்டில் கை கொடுக்கவில்லை.

நுழைவுச்சீட்டு
இந்நிலையில், நடிகை தமன்னா நெப்போடிசம் குறித்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நெப்போடிசம் என்பது வெறும் நுழைவுச்சீட்டு மாதிரி தான். ஆனால், ஒருவரின் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிப்பது அவருக்குள் இருக்கும் தனித் திறமை மட்டுமே எனக் கூறியுள்ளார்.

பல ஜாம்பவான்கள்
வாரிசு அரசியல் என்பது சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் பல ஜாம்பவான் நடிகர்கள், யார் உதவியும் இல்லாமல், சினிமாவுக்கு வந்து சாதித்த பல வரலாறுகளையும் நாம் பார்த்துள்ளோம் என நெப்போடிசம் குறித்த கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











