Tamannaah - காவாலாவுக்கு தமன்னாவின் நடனம்.. காதலர் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
சென்னை: Tamannaah (தமன்னா) ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடியதை அடுத்து அவரது காதலர் விஜய் வர்மா போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு ட்ரெண்டாகியுள்ளது.
பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு அறிமுகமானவர் தமன்னா. அதனையடுத்து தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இரண்டு படங்களும் அவருக்கு சரியான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் 2006ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் தமன்னா. முதல் படத்திலேயே நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் ஓரளவு கவனம் பெற்றார்.

முன்னணி நடிகை: அதனையடுத்து தமிழில் வியாபாரி, கல்லூரி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கல்லூரி படம் ஹிட்டாகி நல்ல நடிகை என்ற பெயரை தமன்னாவுக்கு பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, பையா, சிறுத்தை, தில்லாலங்கடி, வீரம் ஆகிய படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
டல்லான வாய்ப்புகள்: ஆனால் திடீரென தமன்னாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. மீண்டும் பாலிவுட் சென்ற தமன்னா அங்கு தனது திறமை மற்றும் அழகு ஆகியவைகளை வைத்து பட வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் நடித்த ஹிம்மத்வாலா, எண்டெர்டெயின்மெண்ட், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் ஓரளவு கவனத்தை அவர் பக்கம் திருப்பியது.
ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2: சூழல் இப்படி இருக்க ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஹாலிவுட்டில் நடிப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு கவர்ச்சி காட்டுகிறார் என பலர் பேச அதை தமன்னா மறுத்து; கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என விளக்கம் அளித்தார். அதேபோல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
தமிழில் ரீ என்ட்ரி: இந்தச் சூழலில் தமிழில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தமன்னா. அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரில் களமிறங்கியிருக்கிறார். இந்தப் படம் ஹிட்டாகி மீண்டும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

காவலா: ஜெயிலர் படத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு காவாலா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. எப்போதும் ரஜினி பாடல் என்றால் அவர்தான் ஸ்கோர் செய்வார். ஆனால் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ரஜினியின் சிங்கிள் பாடலில் தமன்னா அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போயிருக்கின்றனர்.
விஜய் வர்மா பதிவு: இந்நிலையில் காவாலா பாடலை பார்த்த தமன்னாவின் காதலர் விஜய் வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தப் பாடல் நெருப்பாக இருக்கிறது என குறிப்பிட்டு தமன்னா, அனிருத் உள்ளிட்டோரை டேக் செய்திருக்கிறார். மேலும் சினிமாவின் கடவுள் மற்றும் பெண் கடவுள் எனவும் தெரிவித்திருக்கிறார். அவரது பதிவு இன்ஸ்டாவில் ட்ரெண்டாகிவருகிறது.


Click it and Unblock the Notifications











