Tamannaah: தமன்னாவுடன் செல்ஃபி... மேடையில் ஒரு கேட் வாக்... திரண்ட ரசிகர்களால் மிரண்டு போன ரம்பா
யாழ்ப்பாணம்: ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கலங்கடித்தார் தமன்னா. அதே வைப்பில் இலங்கை யாழ்ப்பாணத்திலும் தமன்னா ஆட்டம் போட ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் தமன்னாவுடன் செல்ஃபி எடுக்கக் கூடிய கூட்டத்தை பார்த்து ரம்பாவும் மிரண்டுவிட்டார்.
தமன்னாவுக்காக கூடிய கூட்டம்
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகை ரம்பாவின் கணவர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு 30000 முதல் 40000 பார்வையாளர்களுக்கு மட்டுமே சீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் இலவசமாக பார்க்கவும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாம். இதனால் அங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தமன்னா, யோகி பாபு ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள 30000 ரூபாய் வரை கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பையா படத்தில் இடம்பெற்ற 'அடடா மழை டா’ பாடலுக்கு தமன்னா ஒய்யாரமாக ஆட்டம் போட்டார்.
அப்போது இலவசமாக அனுமதிக்கப்பட்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கான பகுதியில் இருந்து வெளியேறி மேடையை நோக்கி திரண்டு சென்றுள்ளனர். அதேபோல், ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கும் குத்தாட்டம் போட்ட தமன்னா, பின்னர் மேடையில் கேட் வாக் சென்றார். அப்போதும் ரசிகர்கள் மேடையை நோக்கி ஓடி வந்ததால் அங்கு நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து மேடைக்கு சென்ற ரம்பா, தயவுசெய்து அமைதியா இருங்க என ரசிகர்களிடம் கெஞ்சினார். மேலும் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியாது எனவும், நாங்கள் அனைவரும் போலீஸாரை நம்பி வரவில்லை, உங்களை நம்பிதான் வந்தோம் என கூறிப் பார்த்தார். ஆனாலும் ரசிகர்கள் கட்டுக்கடங்காததால் அங்கே பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதனால் 20 நிமிடங்கள் வரை நட்சத்திர கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியும் நிலைமை கட்டுக்குள் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் அளவுக்கதிகமான ரசிகர்கள் திரண்டதால் மக்கள் நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











