twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மானமுள்ள தமிழர்கள் 'மான் கராத்தே'யை விரட்டியடிக்க வேண்டும்!- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்

    By Shankar
    |

    சென்னை: மானமுள்ள தமிழர்கள் திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் இராஜ்குமார் பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

    தமிழ்த் திரைப்படங்களில் தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தான் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவமதித்து படம் எடுப்பார்கள்.

    மானமிழந்த சமூகம்

    மானமிழந்த சமூகம்

    இப்போது தமிழர்களே தமிழர்களை அவமதித்து படம் எடுக்கும் சூழ்நிலை வந்துவிட்டது . தமிழ்ச் சமூகம் எந்த அளவிற்கு சுயமரியாதை, மானம் இழந்த சமூகமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த திரைபடங்களே சான்று .

    அண்மையில் வெளியான மான் கராத்தே என்ற படத்திலும் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர். கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு போட்டி தமிழ் நாட்டில் வைப்பது தமிழர்களுக்கே அவமானம் இல்லையா?

    இது ஒரு குறளா?

    இது ஒரு குறளா?

    அந்த பத்து திருக்குறள் கூட தெரியாமல் ஒரு பெரிய கூட்டமே நாயகியின் வீட்டின் முன்பு திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்றது. இதில் ஒருவர் கூட திருக்குறளை மனப்பாடமாக சொல்ல முடியவில்லையாம் . திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வாறு திருக்குறள் சொல்கிறார்...

    "ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல்,
    அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ''.

    இப்படி யாரவது திருக்குறள் சொல்வார்களா ? இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் அல்லவா? இப்படியான காட்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் நம் தமிழ் சமூகம் திரையரங்கில் சிரித்துக் கொண்டு வெளியே வருவது வேதனையளிக்கிறது.

    திருவள்ளுவரையே தெரியாத நாயகன்

    திருவள்ளுவரையே தெரியாத நாயகன்

    அடுத்ததாக கதாநாயகனுக்கு திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியாதாம். அதை யார் எழுதினார்கள் என்று கூட தெரியாதாம். தமிழ்நாட்டில் பள்ளியில் சேர்ந்து தமிழ் படிப்பவர்கள் அனைவருக்கும் திருக்குறள் மனப்பாடப் பகுதி ஆகும்.

    அப்படி இருக்கும் போது நாயகனுக்கு திருக்குறள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட மற்றுமொரு தாக்குதல் ஆகும். நாயகன் திருக்குறளை எழுதியவர் வைரமுத்து, குறளரசன் என்று அப்பாவித்தனமாக கூறுகிறாராம்.

    அந்த அமலா பால்?

    அந்த அமலா பால்?

    மேலும் அக்காட்சியில் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று வகைப்படும் என்று ஒருவர் சொல்கிறார். உடனே நாயகன், ''அப்ப அந்த அமலா பால் ?" என்று நையாண்டி செய்கிறார். அருகில் உள்ள பெண் ஒருவர் காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண் பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால். அதுதான் காமத்துப்பால் என்று விடை தருகிறார் இன்னொருவர்.

    உலகிற்கு முப்பால் கொடுத்த திருக்குறளையும் , திருவள்ளுவரையும் இத்தகைய கீழ்த்தரமான நகைச்சுவை அவமானப்படுத்துவதாக உள்ளது .

    அகரமுதல எழுத்தெல்லாம்...

    அகரமுதல எழுத்தெல்லாம்...

    அதன் பின்பு நாயகன் திருக்குறளின் முதல் பாடலை சொல்கிறார் . "அகர முதல எழுத்தெல்லாம் 'குமரன் சன் ஆப் மகாலட்சுமி'யே உலகு" என்று சொல்லி அடுத்த திருக்குறள் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார்.

    கதாநாயகியின் வீட்டில் எழுதி உள்ள திருக்குறளை அப்படியே பார்த்து படிக்கிறார் நாயகன். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து ஒரு குறளைக் கூட படித்தது இல்லையாம். இது எப்படி ஒரு ஏமாற்று வேலை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நையாண்டி செய்ய வேற எதுவும் கிடைக்கலியா?

    நையாண்டி செய்ய வேற எதுவும் கிடைக்கலியா?

    இந்த திரைபடத்தை இயக்கியது ஒரு தமிழர், பெயர் திருக்குமரன். நல்ல தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களின் ஒப்பற்ற திருக்குறள் நூலையும் தமிழ் மக்களின் திருக்குறள் அறிவையும் கேவலப்படுத்தி உள்ளார் இயக்குனர் திருக்குமரன்.

    தமிழ்பட இயக்குனர்களே ! உங்களுக்கு நகைச்சுவை நையாண்டி செய்வதற்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லையா ? தமிழர்களின் புனித நூலான திருக்குறள் தான் கிடைத்ததா ? இதுவே இஸ்லாமிய மக்களின் நூலையோ, இந்துக்களின் நூலையோ கேவலப்படுத்தி இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா? தமிழர்கள் மட்டும் என்ன அவமானப்படுத்தினாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே உங்களுக்கு !!

    மானமுள்ளவனாக இருந்தால்...

    மானமுள்ளவனாக இருந்தால்...

    இனி தமிழர்கள் நீங்கள் செய்யும் நகைச்சுவைக்கு சிரித்து விட்டு போய் விடமாட்டார்கள். மானமுள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் . இப்படியாக தமிழர்களின் பண்பாட்டை , தனித்துவத்தை , அடையாளங்களை இழிவு செய்து படமெடுத்தால் தமிழர்கள் நாங்கள் உங்கள் படங்களை திரையரங்கில் ஓட விடமாட்டோம் என எச்சரிக்கிறோம்.

    மன்னிப்பு கேள்.... காட்சியை தூக்கு

    மன்னிப்பு கேள்.... காட்சியை தூக்கு

    மான் கராத்தே படத்தில் திட்டமிட்டு திருக்குறளை அவமானப்படுத்திய இயக்குனரை தமிழர் பண்பாட்டு நடுவம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு அந்த இயக்குனர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழர்களின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அந்தக் காட்சிகளும் நீக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் இப்படியான காட்சிகள் தமிழ்ப் படத்தில் இடம்பெறாதவாறு தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Tamil cultural center has strongly condemned Maan Karate and its director for insulting Thirukkural.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X