4 ஆண்டுகளாக பக்கவாதம்.. மரணத்திற்கு காரணம் இதுதான்.. ஒத்துழைப்பு கொடுங்கள்.. அஜித் அறிக்கை!
சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவரின் மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
85 வயதான அஜித்தின் தந்தை உயிரிழந்ததற்கு திரைப்பிரபலங்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெசன்ட்நகர் மின்மயானத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அறிக்கை
இந்நிலையில் தந்தையின் திடீர் மறைவு குறித்து அஜித்தும், அவரது சகோதரர்களும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

4 ஆண்டுகளாக பக்கவாதம்
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம். மேலும் எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை சிறப்பாக இதுவரை காலமும் வாழ்ந்து வந்தார்.

ஆறுதல் கூறுகின்றனர்
நாம் கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகிறோம் எனக் குறிப்பிடடுள்ளனர்.

ஒத்துழைப்பு கொடுங்கள்
அதுமட்டுமல்லாது எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க. கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என மூவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் இரங்கல்
இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாரின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











