பார்வதி தேவியாக நடித்த தமிழ் ஹீரோயின்.. ஆனால் அவருக்கு அப்படி ஒரு பிரச்னை.. விவரிக்கும் இயக்குனர்!
சென்னை: பார்வதி தேவியாக நடிக்கத் தேர்வான தமிழ் நடிகைக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்தது என்று கூறியுள்ளார் பிரபல இயக்குனர்.
Recommended Video
தூர்தர்ஷனில் 90-களில் ஒளிபரப்பான தொடர், ஓம் நம சிவாய. அந்தக் காலகட்டத்தில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பக்தி தொடர் இது.
இதில், சிவபெருமானாக சமர் ஜெய் சிங், பார்வதி தேவியாக காயத்ரி சாஸ்திரி, விஷ்ணுவாக அமித் பஞ்சோரி, சக்தியாக மன் ஜித் குல்லார், நாரதராக சந்தீப் மேத்தா உட்பட பலர் நடித்திருந்தனர்.

புகழ்பெற்ற தொடர்கள்
1997 ஆம் ஆண்டில் இருந்து 1999 ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான இந்த தொடரை தீரஜ் குமார் இயக்கி இருந்தார். இவர், இந்தியில் ராதோன் கா ராஜா, ரொட்டி கப்டா அவர் மகான், சீர்டிகே சாய்பாபா, கிராந்தி, புரானா மந்திர் உட்பட சில படங்களை இயக்கியவர். லாக்டவுன் காரணமாக, பழைய புகழ்பெற்ற தொடர்கள் இப்போது மீண்டும் ஒளிபரப்பப்படுகின்றன. மகாபாரதம், ராமாயணம் ஆகிய தொடர்களுக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இப்போது ஓம் நம சிவாய தொடர் மீண்டும் ஒளிபரப்பாகிறது.

ராஜாவின் பார்வையிலே
கலர்ஸ் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இத்தொடர். இந்நிலையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை கூறியுள்ளார், இயக்குனர் தீரஜ் குமார். இந்த தொடரில் பார்வதி தேவியாக நடித்தவர், தமிழ் நடிகை காயத்ரி சாஸ்திரி. சென்னையை சேர்ந்தவர். தமிழில், விஜய், அஜித், இந்திரஜா நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் ஜோடியாக நடித்தவர்.

நடிகை காயத்ரி
அரவிந்த் சாமி, ரேவதி நடித்த பாசமலர்கள் படத்திலும் நடித்துள்ளார். மெட்டி ஒலி உட்பட சில தொடர்களில் நடித்திருக்கிறார். இவர், ஓம் நமச்சிவாய தொடருக்காக சுத்தமான இந்தியை சீக்கிரமாகக் கற்றுக்கொண்டு இந்தத் தொடரில் நடித்துள்ளார். இதுபற்றி இயக்குனர் தீரஜ் குமார் கூறியிருப்பதாவது: அப்போது எல்லா கேரக்டருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்துவிட்டோம். பார்வதி தேவியாக நடிக்க, தேர்வானவர் நடிகை காயத்ரி சாஸ்திரி.

தெளிவான இந்தி
சென்னையை சேர்ந்த அவருக்கு, சுத்தமான இந்தி வரவில்லை. அவர் பேசியது முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. பக்தி தொடர் என்பதால் தெளிவான இந்தி பேச வேண்டும். அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருந்ததால் விட்டுவிடவும் மனமில்லை. ஆனால், 'சார் நீங்கள் ஷூட்டிங்கை ஆரம்பியுங்கள். எனக்கு டப்பிங் குரல் கொடுங்கள், விரைவிலேயே இலக்கண சுத்தமாக இந்தியை கற்றுவிடுவேன்' என்று சத்தியம் செய்தார் காய்த்ரி.

சென்னையில் இருந்து
அவர் அர்ப்பணிப்புள்ள நடிகை என்பதால், நம்பி ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டோம். என்ன ஆச்சரியம், சில வாரங்களிலேயே அவர் தெளிவாக இந்தியை கற்றுக்கொண்டார். சுத்தமான இந்தியை பேசினார். இதனால் வியந்தேன். பிறகு படப்பிடிப்பில் ஒரு பிரச்னை இல்லை. இந்த தொடருக்காக பல ஆன்மிகவாதிகளிடமும் எழுத்தாளர்களிடமும் நன்றாக ஆலோசித்து ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம். இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications