"சோதிச்சிறாதீங்க மக்கா..." - தமிழ் சினிமா 2018 களைகட்டுமா... கட்டையைப் போடுமா? #Welcome2018
2017-ம் வருடம் இதோ முடியப் போகிறது. தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த இந்த வருடத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் குறைவாகவே வெளிவந்தன.
விஜய் நடித்த 'மெர்சல்' படமும், அஜித் நடித்த 'விவேகம்' படமும் ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்தன. ரசிகர்களை திருப்தி படுத்தாத ஆண்டாகவே 2017 அமைந்திருக்கிறது.
வருடத்தின் இறுதியில் 'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய சில நல்ல படங்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. வரும் 2018-ம் வருடம் தமிழ் சினிமாவுக்கு எப்படி இருக்கும்?

சினிமாவில் சிக்கல்கள்
ஒருபக்கம் இணையதள பைரசி ஒழிப்பு நடவடிக்கைகள், இன்னொரு பக்கம் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரி உயர்வால் டிக்கெட் விலை அதிகரிப்பு என சினிமாக்காரர்கள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது இந்த ஆண்டில்.

இளம் இயக்குநர்களின் மீது எதிர்பார்ப்பு
பல படங்கள் முரட்டு மொக்கைகளாகி ரசிகர்களை படுத்தி எடுத்தன. புதுமுக இயக்குநர்கள் எடுத்த சில படங்கள் நல்ல கவனிப்பைப் பெற்றன. 'மாநகரம்', '8 தோட்டாக்கள்', 'அதே கண்கள்', 'அறம்', 'அருவி' ஆகிய படங்களை இயக்கிய அறிமுக இயக்குநர்களின் மீது வரும் ஆண்டிற்கான எதிர்பார்ப்பு குவிந்திருக்கிறது.

ரஜினி படங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோர் நடித்த படங்கள் எதுவும் இந்த 2017-ம் வருடத்தில் வெளிவரவில்லை. ரஜினி நடித்து உருவாகியுள்ள 'காலா', '2.ஓ' ஆகிய படங்கள் 2018-ல் ரிலீஸாக இருக்கின்றன. '2.ஓ' திரைப்படம் ஏப்ரலிலும், 'காலா' திரைப்படம் அடுத்த ஆகஸ்டிலும் வெளியாகவிருக்கிறது. ஆக, ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டுதான்!

விஸ்வரூபம் 2
அரசியல் என்ட்ரிக்கு ஆயத்தமாகிவரும் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'விஸ்வரூபம் 2' அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்த 'சபாஷ் நாயுடு' படமும் அடுத்த ஆண்டிலேயே வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசுவாசம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்த 'விவேகம்' படத்திற்கும் சேர்த்து பெரும் வெற்றியைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அஜித். அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'விசுவாசம்' ரசிகர்களின் டார்கெட்டாக இருக்கிறது.

விஜய் 62
'மெர்சல்' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். ஜி.எஸ்.டி வசன சர்ச்சையால் வசூலை அள்ளிய இந்தப் படம் விஜய்க்கு மேலும் பலத்தைக் கொடுத்திருக்கிறது. முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணையும் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

டபுள் தமாக்கா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குள் செல்வராகவன் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சூர்யா. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆக, சூர்யா ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டு டபுள் தமாக்கா கொண்டாட்டம்.

சூப்பர் ஸ்கெட்ச்சு
சில படங்களின் தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு அடுத்தாண்டு வெளிவரவிருக்கும் 'ஸ்கெட்ச்' மற்றும் 'சாமி 2' படங்கள் செம விருந்தாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். செம ஸ்டைலாக கலக்கிவரும் விக்ரம் 2018-ல் பட்டையைக் கிளப்புவாரா?

தனுஷ் - விஜய் செதுபதி
தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என எல்லா இளம் நடிகர்களின் கையிலும் பல படங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், முன்னணி நடிகர்களின் படங்களில் குறைந்தபட்சம் ஒன்றாவது 2018-ம் ஆண்டில் வெளியாகிவிடும். அதனால் அனைவரும் எதிர்பார்க்கும் ஆண்டாக இருக்கப்போகிறது 2018.

ப்ளீஸ் டைரக்டர்ஸ்
கமர்ஷியல் படங்களும், முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களும் மட்டுமே சினிமாவுக்கு வெற்றியைத் தரப்போவதில்லை. நல்ல கதையம்சம் கொண்ட, தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தருகிற வகையிலான சிறு பட்ஜெட் படங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் மனசு வைய்யுங்க சினிமாக்காரர்களே..!


Click it and Unblock the Notifications











