»   »  அகல்திரைப் படங்கள் என்னும் சினிமா ஸ்கோப் படங்கள்!

அகல்திரைப் படங்கள் என்னும் சினிமா ஸ்கோப் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

நம்மில் பெரும்பான்மையோர் சதுரமான படச் சட்டகங்களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதாவது திரையில் விழும் படக்காட்சியின் சட்டகம் ஏறத்தாழ சதுரமாகவே இருக்கும். இடம் வலமாகக் கொஞ்சம் கூடுதல் இருக்கலாமே தவிர, அதைச் சதுரச் சட்டகம் என்றே விளங்கிக்கொள்ளலாம். 36 எம்.எம். என்பார்கள்.


அந்தச் சதுரச் சட்டகத்திற்குள்தான் நம் காலத்தின் செவ்வியல் திரைப்படங்கள் பலவும் தோன்றின. அந்தச் சதுரமே நம் கனவுகளை விரித்துக்கொள்ளப் போதுமானதாகவும் இருந்தது. அந்தச் சதுரக் காட்சியின்மீது நாம் உணர்ந்த மாயம் இன்றைக்கும்கூட தணியவில்லை. பழைய படங்களைப் பார்க்கும்பொழுது அதுவே கச்சிதமான திரைப்பட வடிவம் என்று தோன்றுகிறது. அரும்பெரும் கலைப்பதிவுகள் அவ்வகையில்தான் தோன்றின. அந்தச் சதுர வடிவம்தான் கீற்றுக் கொட்டகைத் திரைக்கூடங்களுக்கும் பொருத்தமாய் இருந்தன. இன்றைக்கும் சதுரச் சட்டகப் படங்களில் சார்லி சாப்ளின் தரும் முழுமையான காட்சியுணர்வைப் பிறவற்றில் பெற இயலவில்லை என்பதும் உண்மை.


Tamil cinema and Cinema scope

சினிமாஸ்கோப் எனப்படுகின்ற அகல்திரைப்படங்கள் இங்கே வருவதற்கு முன்பேயே மேலை நாடுகளில் கோலோச்சத் தொடங்கின. இனி இவ்வகைப் படங்கள்தாம் எதிர்காலத்தில் நிலைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதற்கேற்பவே பெருநிலக்காட்சிகளை அத்திரைப்படங்களில் பதிவு செய்து விழிகளை விரியச் செய்தனர். நிலமளக்கும் வீரர்கள் தோன்றி, தீரச் செயல்கள் செய்த குதிரைப் படங்கள் (வெஸ்டர்ன்) பலவும் அகல்திரைப் படங்களாகவே ஆக்கப்பட்டன. அத்தகைய படங்கள் இங்கேயும் வெளியிடப்பட்டபோது நம் திரையுலகம் எவ்வாறு எதிர்வினையாற்றியது என்பதை இங்கே விளக்கிச் சொல்வோர் யாருமில்லை. அதே வியப்பை ஷோலே என்னும் இந்தியத் திரைப்படமும் ஈட்டியது.


அப்போதைய தென்னிந்தியத் திரையுலகம் உறவுக் கதைகளை எப்படியெல்லாம் எடுக்கலாம் என்று அறையெடுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தது. புதிய மாற்றங்களை இத்துறைக்குள் புகுத்தியவர்கள் பலரும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்திருக்கிறார்கள். ஒரு பெரும்போக்காக மாறும்போதுதான் இங்கே எவ்வொரு மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அதுவரைக்கும் எந்தத் தனி முயற்சியும் கேட்பாரில்லாத கூடத்தில் பாடப்பட்ட பாடல்தான். இம்முயற்சியில் பிடிவாதமாக ஈடுபட்டவர்கள் என்று ஆபாவாணன் குழுவினரைத்தான் சொல்லவேண்டும்.


இராஜராஜசோழன் தமிழில் எடுக்கப்பட்ட முதல் அகல்திரைப்படம் என்றாலும் அந்தப் படத்தைத் திரையிடுவதற்குரிய அகன்ற திரைகள் அப்போது தமிழகத்தில் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். எம்மூரின் மிகச்சிறந்த திரையரங்கில்கூட தொண்ணூறுகள் வரையிலும் சதுரத் திரையையே கட்டியிருந்தார்கள். அகல்திரைப் படங்களை எடுக்கத் துணிந்த பிறகு கதாபாத்திரங்களின் முகபாவனைகளையே படம்பிடித்து இன்னும் பெரிதாகக் காட்டியது மிகப்பெரிய குறையாகும். பெரும் நிலக்காட்சிகளைப் பதிவாக்குவதில் காட்டப்படவேண்டிய ஒளிப்பதிவு நுணுக்கங்களை நம்மவர்கள் தவறவிட்டார்கள். முதன்முயற்சிகளில் ஈடுபட்ட பலரும் அதற்கேற்ற கதையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டைவிட்டனர். அகல்திரைப்படங்கள் என்றால் முதல்வேலையாய்ப் படப்பிடிப்பு அரங்கத்தைவிட்டு வெளியே வரவேண்டும். ஆனால், தமிழில் படமெடுத்தோர் வீட்டுக்கு அரங்கம், பாட்டுக்கு அரங்கம் என்று அரங்கங்களிலேயே சுட்டுக்கொண்டிருந்தனர். இராஜராஜசோழன் உள்பட தமிழில் முதலில் தோன்றிய அகல் திரைப்படங்கள் குழப்பமான எதிர்வினைகளையே பெற்றன.


திரைப்படக்கலை என்பதை என்னதான் அறிவியல் கொடையாகக் கருதினாலும் அது முதன்மையாய் நாடகத்தை அடியொற்றித் தோன்றிய கலைதான். ஐரோப்பியர்களும் பன்னூற்றாண்டுகளுக்கு முன்பேயே நாடகக் கலையில் கொடிகட்டிப் பறந்தவர்களே. உயிர்ப்புடைய இலக்கியங்கள் அங்கே நாடக வடிவில் அரங்கேற்றப்பட்டு மக்கள் மனங்களைக் கொள்ளையடித்தன. நாடக முன்னோடிகள் என்னும் நிலை ஐரோப்பியர்களுக்கு மட்டுமில்லை. தமிழர்களும் நாடகக் கலையின் தொன்மையில் சிறந்தவர்களே. நம்முடைய முத்தமிழ் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழே. தமிழில் ஒன்றை இயற்றுவது, இசைக்கத் தக்கதாயும் நடிக்கத் தக்கதாயும் இருக்கும். அதுதான் நம் சிறப்பு. தொன்மையான நாடகக் கலை வடிவங்கள் நமது நாட்டார் கலைகளிலும் கூத்துகளிலும் இன்னும் தொக்கியிருப்பதைக் காணலாம். திருவிழாவுக்குச் சென்றால் கூத்து கட்டுவார்கள். தவறவிடாமல் பார்க்கவேண்டிய நிகழ்த்து கலை அது.


எடுத்த எடுப்பில் திரைப்படங்கள் எழுதி இயக்கப்பட்டு உருவாக்கப்படவில்லை. ஒரு கூத்தை, நாடகத்தைப் படமாக்குவதற்கே முதலில் முயலப்பட்டது. நாடகத்திற்காக விளக்கை ஏற்றுவதும் காட்சி முடிகையில் விளக்கை அணைப்பதுமாய் எல்லாம் பதிவு செய்யப்பட்டன. அந்தப் பழங்கூறுதான் இன்றும் விளக்கொளிர்வு, விளக்கணைவு முறையாக ஒரு காட்சியின் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் திரைக்கலையில் பயன்படுத்தப்படுகிறது.


அகல் திரைப்படங்கள் தோன்றிய பிறகு காட்சிமய இயக்குநர்கள் முன்னே நகர்ந்தனர். எதையும் காட்சிப்படுத்தி எடுக்கத் துணிபவர்களுக்கு அம்முறை பயன்பட்டது. பாத்திரங்களின் வழியாகக் கதை நகர்த்தியவர்களுக்கு அகல்திரைப்பட முறைமை பிடிபடவேயில்லை. காட்சிச் சட்டகத்தின் வழியாகவே தம் படங்களைச் சிந்தித்த மணிரத்னம் போன்றவர்கள் அகல்திரைப்படம் என்னும் வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டார். ரோஜா என்ற திரைப்படம் அவருடைய காட்சிக் கனவை முழுமையாய் நிறைவேற்றியது. பார்வையாளர்களுக்குப் புதிய நிலங்களும் பேரழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகளும் கண்முன் விரிந்தன. காட்சி ஊடகம் என்பதன் முழுமையான பொருளில் அகல்திரைப்படங்கள் தம் ஆளுமையைச் செலுத்தத் தொடங்கின.


இதற்கு இன்னொரு புறத்தில் காட்சிச் சட்டகங்களின் வழியாய்த் தம் படங்களைக் கருதாமல், கதைமாந்தர்களின் உணர்வும் உறவுமாய்ச் சிந்தித்தவர்கள் இருந்தார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இந்த நிலைமாற்றத்தில் சற்றே தடுமாறினார்கள் என்றால் மிகையில்லை. சினிமாஸ்கோப் வடிவத்தில் விசுவின் படங்களை நினைத்துப் பார்க்கவே முடியாதில்லையா ? அதைப் போலத்தான். அகல் திரைப்படங்கள் பாக்யராஜுக்குக் கைகொடுக்கவில்லை. அகல்திரைப்படங்களில் பாலசந்தரின் திரைமொழியிலும் வன்மை கூடவில்லை. பாரதிராஜா எப்போது காட்சியடுக்கங்களைச் சிந்திப்பவர் என்பதால் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களில் மீண்டும் அழுத்தமான காட்சிப்படுத்தல்களைச் செய்து காட்டினார். காட்சிச் சட்டகங்களை இலக்கணம் பிறழாமல் எடுப்பதில் விருப்புடையவராயிருந்த பாலுமகேந்திராவோ அகல்திரைப்படங்களை இயன்றவரை தவிர்த்தார். அவர்தம் கடைசிக் காலத்தில் 'அது ஒரு கனாக்காலம்' என்ற படத்தில் அகல்திரைச் சட்டகத்தைத் தொடவேண்டியவரும் ஆனார்.


காலப்போக்கில் திரைப்படங்கள் அகல்திரைக்கே நிலைத்தன. அந்தப் போக்கு தொலைக்காட்சித் திரைகளையும் அகலமாய் உருவாக்குவதில் முடிந்தது. ஒரு காட்சிச் சட்டகத்தில் எண்ணற்ற உள்ளடக்கங்களை வைத்தடக்கிக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இத்தலைமுறை இயக்குநர்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் பின்னணியில் ஆடவேண்டிய கட்டாயம். அப்போதுதான் திரை நிறைந்து தெரிகிறது. இன்றுள்ள நிலையிலிருக்கும் அகல்திரை வடிவம் மேலும் எத்தகைய மேம்பாட்டை அடையக்கூடும் என்பது களிநயமான கற்பனை.

English summary
Poet Magudeswaran's article on Tamil cinema's transition from 35 mm to cinema scope.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil