»   »  தமிழ் திரையுலகில் புதிய முயற்சி: தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம்!

தமிழ் திரையுலகில் புதிய முயற்சி: தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் (தமிழ் திரைப்பட விமர்சகர்கள் சபை) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 29ந் தேதி தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த நிகழ்வில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இதன் தலைவராக ராம்ஜி (மக்கள் குரல்), செயலாளராக கே.எம்.மீரான் (தமிழ் முரசு), பொருளாளராக அனுபமா (டெக்கான் க்ரோனிக்கல்), துணைத் தலைவராக பிஸ்மி (தமிழ்ஸ்க்ரீன்), துணைச் செயலாளராக ஷங்கர் (ஒன்இந்தியா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

Tamil Cinema Critic Council launched

ஜியா உல் ஹக் (தினகரன்), சுகந்த் (டைம்ஸ் ஆஃப் இண்டியா), ஜெயந்தன் (தமிழ் இந்து), ராம்குமார் (மாலை முரசு), மா.கா.செந்தில்குமார் (ஆனந்த விகடன்), அந்தணன் (நியூதமிழ்சினிமா.காம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இது தொடர்பாக தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு விமர்சகர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வந்திருக்கிறார்கள். நல்லதை பாராட்டியும், அல்லதை சுட்டிக்காட்டியும் தமிழ் சினிமாவை வளர்த்தெடுக்க உதவியிருக்கிறார்கள். ஒவ்வொரு திரைக்கலைஞனின் வளர்ச்சியிலும் விமர்சகர்களின் பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கண்ணியமான, நேர்மையான, கூர்மையான விமர்சனங்களால் விமர்சகர்கள் தங்கள் பணியை செய்து வந்திருக்கிறார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள். விருதுகளை விட விமர்சகர்களின் பாராட்டை கலைஞர்கள் மதித்தார்கள்.

Tamil Cinema Critic Council launched

ஆனால் இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விமர்சனத்தின் தரத்தையும், விமர்சகர்களின் தன்மையையும் மாற்றி தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது. செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா மேன்களாக மாறிவிட்டதும், பேஸ்புக்கில், டுவிட்டரில், வாட்ஸஅப்பில் கணக்கு வைத்திருக்கிறவர்கள் சினிமா விமர்சகர்களாவும் மாறிவிட்டார்கள். சினிமாவை விமர்சனம் செய்ய சினிமா பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த விமர்சனத்தை பொது வெளியில் பகிர்கிறபோது அதற்குரிய நேர்மையும், உண்மையும் தேவை. ஆனால் அவை மீறப்பட்டு வருகிறது.

தனி நபர்களின் சமூகவலைத்தள விமர்சனத்தின் மூலம், குறிப்பாக 4 வரியில் எழுதப்படும் விமர்சனம் மூலம் ஒரு திரைப்படத்தை வெற்றி பெறவும் வைக்க முடியும், தோற்றுப்போகவும் செய்ய முடியும் என்கிற தவறான கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் அந்த திரைப்படம் தொடர்பான கலைஞர்களை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து அவதூறாக எழுதுகிற போக்குகளும் கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே திரைப்படத்தை நேசிக்கிற, நேர்மையாக, உண்மையாக, கூர்மையாக விமர்சிக்கிற விமர்சகர்கள் தங்களின் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

Tamil Cinema Critic Council launched

வணிக ரீதியான விருதுகளும், விழாக்களும் பெருகி விட்ட சூழ்நிலையில் உண்மையிலேயே திறமையான கலைஞர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு உண்மையான விமர்சகர்களுக்கு இருக்கிறது. அந்த பணிகளை செவ்வனே செய்யவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.

எந்த சமரத்துக்கும் இடம் கொடுக்காமல், விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் பணிசெய்வதற்காக திரைத்துறையைச் சார்ந்த யாரிடமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பணமோ, பொருளோ, சலுகையோ பெறுவதில்லை என்கிற உறுதியான நிலைப்பாட்டோடு இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். குறைவான உறுப்பினர்களுடன் நிறைவான ஒரு அமைப்பாக இதனை வழிநடத்திச் செல்ல இருக்கிறோம்.

வெளியாகும் திரைப்படங்களின் நிறைகளை பாராட்டியும், குறைகளை கண்ணியமாக சுட்டிக் காட்டியும் விமர்சனங்களைப் பதிவு செய்வது, ஆண்டு தோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுன்சில் உறுப்பினர்கள் வழங்கும் வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்து கவுரவிப்பது, வணிக நோக்கம் இன்றி விருது விழாவை நடத்துவது ஆகியவை கவுன்சிலின் முக்கிய நோக்கமாகும்.

திரைப்படத்துறையில் அவ்வப்போது சாதனை படைக்கிறவர்களையும் கவுன்சில் கவுரவிக்கும். திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பையும் கவுன்சில் வழங்கும்."

- இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Cinema Critic Council, a new cinema journalist organisation has been launched on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X