'டிஏ'-டிபன் கேட்கும் விநியோகஸ்தர்கள் – செல்வமணி புலம்பல்

அன்புள்ள துரோகி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஏவிஎம் ஏஸி அரங்கில் நடந்தது.
இந்த விழாவில், இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், "காடு வெளஞ்சது மச்சான் நமக்கு கையும் காலும்தான மிச்சம் என்று பட்டுக்கோட்டையார் பாடிய நிலையில்தான் இப்போதைய பட அதிபர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் படம் தயாரிப்பதையே நிறுத்திக் கொண்டேன்.
முன்பெல்லாம் குறைந்த முதலீட்டில் படம் எடுக்க முடிந்தது. இப்போது அப்படி முடிவதில்லை. 'செம்பருத்தி' படத்தை ரூ.40 லட்சத்தில் எடுத்தேன். அந்த படம் ரூ.11/2 கோடிக்குமேல் வசூல் செய்தது. கேப்டன் பிரபாகரன் படம் ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தில் ரூ.50 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது.
இப்போது ரூ.1 கோடி செலவில் படம் தயாரிக்க வேண்டுமானால், அதை ரிலீஸ் செய்வதற்கு கையில் ரூ.2 கோடி வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. படங்களை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் இல்லை. அப்படியே யாராவது ஒரு வினியோகஸ்தர் வந்தால், அவர் போக்குவரத்து செலவும், டிபன் செலவும் கேட்கிறார்.
படம் தயாரிப்பதற்கு இப்போதெல்லாம் யாரும் பைனான்ஸ் கொடுப்பதில்லை. சொந்த பணம் வைத்திருந்தால் மட்டுமே படம் தயாரிக்க முடிகிறது..." என்றார்.
அடுத்து பேசிய வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், செல்வணிக்கு பதில் தரும் வகையில் பேசினார்.
அவர் கூறுகையில், "வினியோகஸ்தர்கள் யாரும் இல்லை என்றும், அவர்கள் போக்குவரத்துக்கும், டிபனுக்கும் பணம் கேட்கிற நிலையில் இருக்கிறார்கள் என்றும் செல்வமணி வருத்தப்பட்டார். அதற்கு காரணம், படங்களின் தோல்விகள்தான். ஒரு படம், ஒரே ஒருநாள் மட்டும் ஓடுகிறது. இன்னொரு படம், ஒரே ஒரு காட்சி மட்டும் ஓடுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியாகிற படம், அன்று இரவுக் காட்சிக்கு ஆளில்லாமல் தூக்கப்படும் மோசமான நிலைதான் உள்ளது.
இந்த சூழ்நிலையில், வினியோகஸ்தர்கள் எப்படி வாழ முடியும்? இப்போதெல்லாம் படம் தயாரித்தால் மட்டும் போதாது. அதை ரிலீஸ் செய்வதற்கு தெம்பு வேண்டும். விளம்பரப்படுத்துவதற்கு தெம்பு உள்ளவர்கள் மட்டுமே படம் தயாரிக்க முடியும்..,'' என்றார்.
பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் அகத்தியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் பேசினார்கள்.
அன்புள்ள துரோகி பட தயாரிப்பாளர் டி.எஸ்.சக்திவேல் வரவேற்று பேசினார். இயக்குநர் வி.பழனி நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











