ரணசிங்கங்களின் கண்ணீர் தேசிய கீதமாய் ஒவ்வொரு வரிகளும்.. வைரமுத்துவுக்கு குவிகிறது பாராட்டு!
சென்னை: க/பெ. ரணசிங்கம் படத்திற்காக வைரமுத்து எழுதிய "பறவைகளா.. பறவைகளா" பாடல் வரிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள அத்தனை பாடல்களுக்கும் அழகு தமிழில் வலிகள் ததும்பும் சொற்களுடன் பாடல்களை வடித்துக் கொடுத்து இருக்கிறார் வைரமுத்து.

என்ன கதை
வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள இந்த மூன்றாவது பாடல் மூலமாகவே க/பெ. ரணசிங்கம் படத்தின் கதை இதுவாகத் தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ரணசிங்கத்துக்காக எதுக்காக போராடுகிறார் என்கிற குழப்பமும் தீர்ந்துள்ளது. வெளிநாட்டில் வேலைக்காக சென்று தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் ரணசிங்கம் விஜய்சேதுபதியை காப்பாற்ற போராடுவதே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.

கண்ணீர் தேசிய கீதம்
குஞ்சிகளுக்கு பசி எடுக்கிறது என்பதற்காக தேசங்கள் பல கடந்து உணவு தேடும் பறவைகளை போல, குடும்பத்தின் வறுமையை போக்க ஏராளமான ரணசிங்கங்கள் தேசாந்திரிகளாக மாறி பரதேசம் சென்று பிழைப்பு தேடுகிறார்கள். பாலை வன தேசங்களில் வெய்யிலில் வாடி தன் குடும்பத்தை வாழ வைக்கும் ரணசிங்கங்களின் கண்ணீர் தேசமாக இந்த "பறவைகளா.. பறவைகளா" பாடலை வைரமுத்து எழுதி உள்ளார்.

குவிகிறது பாராட்டு
"விடை கொடு எங்கள் நாடே - ஈழத் தமிழர்க்கு, காற்றுக்கில்லை கருப்பு வெள்ளை, கறுப்பின மக்களுக்கு, பறவைகளா.. பறவைகளா.. உறவை பிரிந்து வாழ்வை தேடி பாலை சென்ற மக்களுக்கு என பண் பாடுகிறீர்கள்..விரைவில் ஒருநாள் திராவிட நாடு உங்கள் வரிகளை தேசியகீதமாய் பாடும்" என தமிழ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இன்னொரு தேசிய விருது
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கருத்துள்ள பாடல்களை எழுதி ஏழு முறை தேசிய விருது வென்றுள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு இன்னொரு முறை இந்த "பறவைகளா.. பறவைகளா" பாடல் தேசிய விருதை பெற்றுத் தரும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, விஜய்சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான தர்மதுரை படத்தின் "எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று தான்" பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

தண்ணீர் தேசம் எழுதியவருக்கு
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ள நிலையில், அந்த பாடலின் வரிகளை கேட்டுவிட்டு, "தண்ணீர் தேசம் எழுதியவருக்கு, கண்ணீர் தேசமா எழுத வராமல் போய்விடும்? தேசம் கடந்து வாழ்வு தேடுவோர் வலி சரியாக புரிந்து
வலியுற்றோர் மனதிற்கான மருந்து இந்த பாடல் கவிப்பேரரசு மகுடத்தில் இன்னும் ஒரு பீலி" எனக் நெஞ்சு குளிர பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











