அக்கறையில்லாத பெரிய நடிகர்கள்.. தலையில் மண் அள்ளி போட்டுக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்!
சென்னை: தமிழ் சினிமா 1000 நாட்கள் ஓடிய படங்களை எல்லாம் பார்த்து கடந்து வந்துள்ளது. ஆனால் வசூல் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்ற சூழல் வந்ததும், தமிழ் சினிமா மெல்ல மெல்ல தனது கீரிடத்தில் முக்கியமான பகுதிகளை சிதைத்து வருகிறது என்று கூறும் நிலையில் இன்றைக்கு உள்ளது. வணிக வெற்றிக்குள் தமிழ் சினிமா சென்ற பின்னர் தமிழ் சினிமா வளர்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். அதே நேரத்தில் வணிக வெற்றியை முற்றிலும் தவிர்த்துவிட முடியுமா என்றால் அது சாத்தியமற்றது. அப்படியானால் வணிக வெற்றி மோகத்தில் எங்கெல்லாம் தமிழ் சினிமா சறுக்கி வருகிறது, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான திரையரங்குகள் இருந்தது. அவற்றில் பல நூறு திரையரங்குகள், ' வெங்கடேஸ்வரா தியேட்டருக்கு இரண்டு டிக்கெட் கொடுங்க என பேருந்தில் நடத்துநரிடம் டிக்கெட் வாங்கவும், ஸ்ரீ வள்ளி தியேட்டரைத் தாண்டியதும் ஒரு ரைட்டு வரும் பாருங்க அதுல திரும்புங்க என வழி சொல்லவும் தான் பயன்படுகிறது. பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக, ரைஸ் மில்லுகளாக மாறிவிட்டது. பல தியேட்டர்கள் இருந்த இடமே தெரியாமல் இடிக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்பட்டுவிட்டது. இந்த நிலைக்கு காரணம் தமிழ் சினிமா நகர்ந்த வணிக வெற்றியின் மோகத்தை ஒரு காரணமாக குறிப்பிடலாம்.

அதாவது, தமிழ் சினிமாவில் இப்போது பெரிய படம், சின்ன படம் என்ற பதம் முன்பை காட்டிலும் அதிகமாகிவிட்டது. இதனால் பல சிறிய பட்ஜெட் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மக்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது, அல்லது ரிலீஸ்க்கு வராமலே போய்விடுகிறது. இதுதான் தமிழ் சினிமா தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை. ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும்போது மொத்த திரையரங்கிலும் அந்த படத்தை ரிலீஸ் செய்ய போட்டி போட்டு படத்தை வாங்கிக் கொண்டு செல்வது. ஆனால் இளம் நடிகர்கள் நடித்து வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை திரையிட முன் வருவதில்லை.
மொக்கைப் படங்கள்: கதையம்சமே இல்லாமல் பெரிய நடிகர்கள் நடிக்கும் காட்டு மொக்கை படங்களை நம்பும் திரையரங்க உரிமையாளர்கள், படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாதபோது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட நல்ல படங்களை திரையிட முன்வருவதில்லை. தயாரிப்பாளர்கள் படத்தை புரோமோசன் செய்தாலும், திரையரங்க உரிமையாளர்கள் முன்புபோல் படத்திற்கு விளம்பரம் செய்வதில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தோல்வியைத் தழுவிய பெரிய படங்கள்: கடந்த ஆண்டில் வெளியான பெரிய நடிகர்களின் படங்களான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா, இந்த ஆண்டில் வெளியான விடாமுயற்சி, ரெட்ரோ, தக் லைஃப் போன்ற படங்கள் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி படங்கள். இந்த படங்கள் வெளியான போது இவற்றுடன் வெளியான சின்னப் படங்கள் மக்களுக்கு தெரியாமலே போயுள்ளது. பெரிய படங்கள் வெளியாகும் போது அதே தேதியில் சின்ன படங்களும் வெளியாகும் ஆரோக்கியமான சூழல் இங்கு ரொம்பவும் முக்கியம். அதுதான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த ஆரோக்கியமான சூழல் என்பது, ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களை திரையரங்க உரிமையாளர்கள் ஒதுக்க வேண்டும். அதற்கும் மேல் அவர்கள் தியேட்டர்கள் ஒதுக்க முன் வரக்கூடாது.
இப்படியும் செய்யலாமே: மல்டி ஃப்ளக்ஸ் தியேட்டர்களில் எப்படி ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை திரையிட முடிகிறதோ, அதேபோல், ஒரு திரையை மட்டும் கொண்டுள்ள திரையரங்களில் புது படம் வெளியாகி சில நாட்களுக்குள் உடன் வெளியான மற்ற படத்தையும் சில காட்சிகள் திரையிட வழி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 25 திரையரங்குகள் உள்ள ஒரு மாவட்டத்தில் ஆல்டர்நேடிவ் முறையில் பெரிய நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட திரையரங்குகளில் வார நாட்களிலும் இரண்டாவது வார இறுதியிலும் சிறிய படங்களை வெளியிட வேண்டும். இதை விடுத்து விட்டு பெரிய படங்களை மட்டும் நம்பிக் கொண்டு திரையரங்க உரிமையாளர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளக் கூடாது. பெரிய நடிகர்களும் தங்களது படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் படத்தை வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

நடவடிக்கைகள் : அதே நேரத்தில் உடன் ரிலீஸ் ஆகும் சிறிய படங்களை ரிலீஸ் செய்யும் ஒரு திரை கொண்ட திரையரங்குகளுக்கும் அதேநாளில் பெரிய படங்களை திரையிட காட்சிகளை அட்டவணை படுத்தவேண்டும். அதேபோல் பெரிய நடிகர்களின் படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கொடுக்கும் ஷேர் என்பது சிறிய படங்களைக் காட்டிலும் அதிகம். இந்த ஷேரின் அளவினை தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்குள் விற்பனை செய்யும் பொருட்களுகளின் விலையை குறைக்க வேண்டும். தியேட்டரை மிகவும் லக்சூரியான, காஸ்ட்லியான இடம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் இருந்து நீக்க மொத்த திரைத்துறையும் சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











