ஜிப்ரான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.. அங்கீகாரம் பட வெற்றி விழாவில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் ஆவேசம்
சென்னை: தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டரிக்கலாகவே வெற்றியைப் பெற்ற படம் அங்கீகாரம். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தின் டிரைலர் வெளியான காலத்திலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது பலர் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்து பேசுகையில், ஜிப்ரானுக்கு தமிழ் சினிமாவில் முறையாக அங்கீகாரம் கிடைப்பதில்லை, ஆனாலும் அவர் படத்திற்கு படம் தரமான இசையை கொடுத்து வருகிறார் என்று பேசி உள்ளார்.
அதாவது அவர் பேசுகையில், இந்த படத்திற்காக முதலில் நாங்கள் ஒரு எடிட்டரை ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தோம். படத்தின் காட்சிகளை அந்த எடிட்டருக்கு போட்டுக் காட்டினேன், அவரோ நாங்கள் காட்சிகளை காட்டும் போது எல்லாம் புரியலையே புரியலயே என்றே சொல்லி வந்தார். இதனால் ஒரு முறை நான் எடிட்டர் தினேஷிடம் படத்தின் காட்சிகளை போட்டுக் காட்டினேன். அவரோ இந்த படத்தை மொத்தமாக வேறு லெவலுக்கு மாற்றிவிட்டார். இந்த படத்திற்கு இப்படியான வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் அவரும் ஒருவர். இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் எடிட்டர்களில் தினேஷ் கட்டாயம் இருப்பார்.

அங்கீகாரமே கிடைக்கவில்லை: அதேபோல் இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்தும் நான் பேச வேண்டும். ஜிப்ரான் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு. காரணம் அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. யாரிடம் சென்று படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறினால், உடனே எதிரில் இருப்பவர்கள் சொல்வது, ஜிப்ரானா பின்னணி இசை மிரட்டி விட்டுடுவாருங்க... ஆனால் என்ன பாட்டு தான் சரியாக வராது என்று கூறுகிறார்கள். அதனால் ஜிப்ரான் நீங்களும், முட்டை.. கலக்கி என்று ஏதாவது போடுங்கள்.. நீங்கள் ஒவ்வொரு படத்திற்கும் பார்த்து பார்த்து இசையமைப்பதை எல்லாம் இங்கு யாரும் பெரிதாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். எப்போது உங்களுக்கும் உங்களது இசைக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் இந்த தமிழ் சினிமா உருப்படும்" என்று மிகவும் ஆதங்கமாக பேசினார்.

இணையவாசிகள் டென்சன்: இவரது இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு வகையில் ஏற்புடையது தான் என்றாலும், கோட்டபாடி ஜே. ராஜேஷ் ஆவேசமாக பேசும் போது ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடலை விமர்சித்து விட்டுச் சென்றுவிட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் சமகாலத்தில் இருக்கும் டாப் இசையமைப்பாளர். உதாரணத்திற்கு வேறு இசையமைப்பாளரின் பாடலைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று இணையவாசிகள் பதிவிட்டும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications