விஜய் தான் நம்பர் ஒன்.. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்.. டாப் லிஸ்ட் இதோ!
சென்னை: பாலிவுட் திரையுலகால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என மகேஷ் பாபு ஒரே போடாக போட்டுள்ள நிலையில், மகேஷ் பாபுவை விட தமிழ் சினிமா நடிகர்கள் அதிகளவில் சம்பளம் வாங்கி வருவது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் என மூன்று முன்னணி நடிகர்களும் சுமார் 100 கோடிக்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கி உச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் குறித்து முழு விபரத்தையும் இங்கே பார்ப்போம்..

நம்பர் ஒன் விஜய்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் உள்ளார் நடிகர் விஜய். தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தளபதி 66 படத்துக்கு 118 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஸ்ட் படத்திலேயே அவரது சம்பளம் 100 கோடியை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ராஜ்ஜியம்
40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என எத்தனையோ நடிகர்கள் அவருக்கு பிறகு வந்தாலும், கூட இன்னமும் களத்தில் சிங்கமாக நின்று கர்ஜனை செய்து வருகிறார். தலைவர் 169 படத்துக்கு 105 கோடி ரூபாயை சம்பளமாக ரஜினிகாந்த் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

100 கோடி கிளப்பில் அஜித்
ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித்தும் 100 கோடி சம்பளம் வாங்கும் கிளப்பில் இணைந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் ஆகிய மூன்று பேர் மட்டுமே தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளனர்.

கமல் சம்பளம்
அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருந்தால் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் 50 கோடிக்கும் அதிகமாக சென்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் நிலையில், படம் எந்த அளவுக்கு வசூல் செய்கிறதோ அந்த அளவுக்கு கமலுக்கு பெரிய லாபம் காத்துக் கிடக்கிறது.

சூர்யாவின் சம்பளம்
2டி நிறுவனத்தை நடத்தி தயாரிப்பாளராக தனது படங்களையும் பிற படங்களையும் தயாரித்து அமோகமாக சம்பாதித்து வருகிறார் நடிகர் சூர்யா. இவர் மற்ற பேனர்களில் நடிக்க புதிய படங்களுக்கு அதிகபட்சமாக 28 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்குத் தான் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் சூர்யா என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிக்க உள்ள சூரரைப் போற்று இந்தி படத்தையே தயாரிக்கும் சூர்யா ஆண்டுக்கு தயாரிப்பில் அதிகமாக சம்பாதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்
இந்த பட்டியலில் சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளத்துடன் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் டானாக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் பைலிங்குவல் படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளாராம். கமல் பேனரில் அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கும் அதே சம்பளம் தானாம்.

மற்ற நடிகர்கள்
சியான் விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் 15 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகைகளில் நயன்தாரா மட்டுமே 10 கோடி சம்பளம் வரை வந்துள்ளதாகவும் மற்ற நடிகைகள் பலரும் 5 கோடி ரூபாய்க்குள் தான் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பளம் பெரிதல்ல
முன்னணி நடிகர்கள் படங்களின் பிசினஸ் பொறுத்துத் தான் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதாகவும், பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது பெரிதல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் படங்களை தமிழ் சினிமா நடிகர்கள் கொடுக்க வேண்டும் என்கிற விமர்சனத்தை சமீப காலமாக சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் பலரே கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











