Na. Muththukumar: காதலர்களின் தேசிய கீதத்தை எழுதிய நா. முத்துகுமார்.. 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
சென்னை: தமிழ் தெரிந்த காதலர்களின் தேசிய கீதமாக விளங்கிய பல பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் நா. முத்துகுமார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மறைந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதல் மட்டும் இல்லாமல், அன்பு, தோழமை, தாய்மை, வலி, இழப்பு, சோகம், கவலை என மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் கவிதை, பாடல்கள் எழுதி ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நா. முத்துக்குமார்.
இவர் மறைவிற்குப் பின்னர் இதுவரை அவரைப் போல் ஒரு கவிஞர் வரவில்லை. முத்துக்குமார் இந்த தலைமுறையின் கவிஞன் மட்டும் இல்லை, முத்துக்குமார் இந்த நூற்றாண்டின் அடையாளம். தமிழ் சினிமாவில், கவிஞர் கண்ணதாசன் உச்சத்தில் இருக்கும்போது, தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி அதில் கோலோச்சியது மட்டும் இல்லாமல், கண்ணதாசனின் அன்பைப் பெற்றவராக திழந்தவர் கவிஞர் வாலி.

கவிஞர் வாலியைப் போல், தமிழ் சினிமாவில் வைரமுத்து கோலோச்சிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமாவின் அடையாளமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தேசிய விருது வாங்கி அசத்தினார். பாடல்கள் மட்டும் இல்லாமல், இவரது கவிதைத் தொகுப்புக்கு இன்றைக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்று சொல்வதை விடவும், வாசகர்கள் உள்ளனர். ஆம், இலக்கியங்களைத் தேடித் தேடி, படிக்கும் வாசகர்கள் வட்டத்தைப் போல், நா. முத்துகுமாரின் கவிதை தொகுப்புகளை வாங்கி, விவாதித்து சிலாகிக்கும் வாசகர்கள் வட்டம் பல உள்ளது.

கல்லறை: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், ஆனந்த யாழை மீட்டுகிறாள் போன்ற பாடல்கள் மூலம் தந்தையின் பாசத்தினை திரையில் ஒளிக்கச் செய்தவர். யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். தனது பாடல் வரிகள் மூலம், பலரை பல கோணங்களில் யோசிக்க வைத்துள்ளார். குறிப்பாக, " ஒரு உருவகத்தை அடுத்த கட்டத்திற்கு எனது பாடல் வரிகளின் வழியாக கொண்டு சென்றுள்ளேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், காதல் கொண்டேன் படத்தில் கல்லறை பூக்களுக்கு அந்தஸ்த்தே இல்லை என்றேன் (கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே). அதுவே காதல் படத்தில் கல்லறை பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகள் தேடி வரும் என எழுதியிருந்தேன். மீண்டும் கல்லறை பூக்களை குறித்து நான் எழுதுவேன். அதற்கான கதை வந்தால் நான் எழுதுவேன்" என கூறியிருந்தார்.

கண்ணியம்: இப்படி யாருமே யோசிக்காத கல்லறைப் பூக்களை தனது பாடல்கள் வழியாக ரசிகர்கள் பட்டாளத்திடம் கொண்டு சென்றவர். காதலோ, காமமோ எதுவானாலும் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காமத்தைக் கொண்டாடவைத்தவர் நா. முத்துக்குமார். இவர் மறைந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் ஆகின்றது. தமிழ் சினிமா உள்ளவரை, தமிழ் உள்ளவரை நா. முத்துக்குமார் என்றைக்கும் கொண்டாடப்படுவார், நினைவுகூறப்படுவார்.


Click it and Unblock the Notifications











