100வது படம்.. அதுவும் தனது சொந்த வாழ்க்கை படத்திற்கு பாடல் எழுதிய கார்த்திக் நேத்தா..எமோஷனலாக நன்றி!
சென்னை: வரும் வெள்ளிக்கிழமை அதாவது வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் டே. இந்த படத்தை நியூ மங்க் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் என். அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், பக்ஸ் பகவதி பெருமாள், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். குட் டே படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் சொந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தான் பாடல் எழுதும் 100வது படம் என பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வாழா என் வாழ்வை வாழவே, போறேன் நான் போறேன், அஞ்சு வண்ணப் பூவே, விண்வெளி நாயகா என மக்கள் மனதில் ரீங்காரமிடுகிற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. இவரது வரிகளுக்கு என பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். கண்ணதாசன் மற்றும் நா. முத்துகுமாரின் பக்தனாக பெயரளவில் மட்டும் இருந்திடாமல் அவர்களின் பக்தன் என்பதற்கு தனது ஒவ்வொரு பாடல்கள் மூலமும் அர்த்தம் சேர்த்து நிரூபித்து வருகிறார்.

100வது படம்: இந்நிலையில் தான் பாடல் எழுதிய 100வது படமான குட் டே படம் குறித்தும் தனது திரை வாழ்க்கை குறித்தும் மிகவும் எமோஷனலாக பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " GOOD DAY! பாட்டு எழுத சென்னைக்கு வந்து பாதைகள் பல மாறிய கவிஞன் எனக்கு, வெளிவர இருக்கிற "GOOD DAY திரைப்படம் நூறாவது படம். 2005 இல் தொடங்கிய பயணம். இருபது ஆண்டுகளில் நூறு படங்கள் என்பதும் நூற்றிச் சொச்சம் பாடல்கள் என்பதும் பெரும் சாதனை ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம். ஒரு PESSIMIST ஐ OPTIMIST ஆக மாற்றிய மனிதர்களின் அன்பிற்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி.
நா. முத்துக்குமார்: வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோர்க்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. பெரிதினும் பெரிது செய்ய விழைவேன். இந்நேரத்தில் கண்ணதாசனையும் அறிவுமதி அண்ணனையும் என்னன்பு நா. முத்துக்குமாரையும் தழுவிப் பணிகிறேன். குடும்பத்தார்க்கு எனது நன்றி.
தமிழ்ப் பேரணங்கே: "என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை யான் பாலித்திடல் வேண்டும்" என்ற பாரதியைப் போல நானும் பாடல் வழி, எழுத்தின் வழி பெருமபிழம்பாய்ப் பிறப்பெடுக்கவே விரும்புகிறேன். வழிப்போக்கர்களின் நினைவில் ஒரு கதையாக, வாழ விரும்புவோரின் அகத்தில் ஓர் ஊக்கப்பாடலாக நின்று நிலைபெற அருள்வாய் தமிழ்ப் பேரணங்கே!" என்று மிகவும் எமோஷனலாக பதிவிட்டு வருகிறார். இவரது இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











