தமிழ் சினிமாவும் சில ஐகானிக் Uncle - களும்.. அடடே Uncle - களை இப்படி கொண்டாடி இருக்காங்களேப்பா!
சென்னை: தமிழ் சினிமா என்றைக்குமே குடும்ப உறவுகளைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சரி, தலைமுறைகள் மனித உணர்வுகளை அணுகும் விதம் மாறிக்கொண்டே போனாலும் சரி, குடும்ப உறவுகளை கொண்டாடுகிற மக்களும், அதைக் கொண்டாடும் சினிமாக்களை கொண்டாடும் ரசிகர்களும் என்றைக்கும் இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா மாமன்கள் தொடங்கி தாய் மாமன்கள் வரை கொண்டாடித் தீர்த்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா கொண்டாடிய சில ஐகானிக் மாமாக்களை இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் தாய் மாமன் என்றாலே, " தாய்மாமன் சீர் சுமந்து வாரான்டி" என கிழக்குச் சீமையிலே படத்தில் இடம்பெற்ற கவிஞர் வைரமுத்துவின் பாடல்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். குடும்ப நிகழ்வுகளில் தாய்மாமன் சீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்மாமன் இருந்தால் தான் சபையே நிறையும் எனக் கூறும் தமிழர் பண்பாட்டில் இந்த பாடல் ஓர் முக்கிய அங்கத்தைப் பெற்று விட்டது எனலாம். இன்றைக்கும் தென் தமிழகத்தில் தாய்மாமன் சீர் கொண்டு போகும்போது இந்த பாடலை எட்டு ஊருக்கு கேட்கும்படி ஒலிக்கச் செய்து கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். சில தாய்மாமன்கள் லாரி லாரியாக சீர்வரிசை கொண்டு போனதையும் பத்திரிகைச் செய்திகள் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடே கொண்டாடும் இந்த பாடல் காட்சிகள், தென் தமிழ்நாட்டில் பொருளாதார மற்றும் உளவியல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

ரஜினி அங்கிள்: தமிழ் சினிமா கொண்டாடிய மற்றொரு மாமன் கதாபாத்திரம் என்றால் அது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாமன் கதாபாத்திரம்தான். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினியைப் பார்த்து, ரஜினி அங்கிள், நான் இங்கே இருக்கேன்.. ரஜினி அங்கிள் என்று கூறிய குழந்தை நட்சத்திரம், அதன் பின்னர் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. எஜமான் படத்தில் ரஜினி மீனாவுக்கு முறை மாமனாக நடித்தார். அன்புள்ள ரஜினிகாந்த் படம் 1984இல் வந்த போது இது போது பொருளாகவில்லை. பேசு பொருளாக மாறவும் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் 1993 ஆம் ஆண்டு எஜமான் படம் வெளியானபோது, ரஜினியைப் பார்த்து ரஜினி அங்கிள்னு சொல்லி 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த குழந்தை நட்சத்திரமா எஜமான் படத்தில் ரஜினியை மாமா.. மாமா என வெட்கத்தோடு சுத்தி வந்தது என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

ரிக்ஷா மாமா: மாமாவைக் கொண்டாடிய இன்னொரு படம் சத்யராஜின் ரிக்ஷா மாமா. இந்த படத்தின் கதாபாத்திரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஷாகாரன் படத்தில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் குழந்தைகள் சத்யராஜை ரிக்ஷா மாமா ரிக்ஷா மாமா என்றே அழைத்து வரும். இதில் என்ன விஷயம் என்றால், கதைப்படி அவரது சொந்த மகளே அவரை ரிக்ஷா மாமா என்றுதான் அழைப்பார்.
அந்த படத்தில் இடம் பெற்றுள்ள அன்னக்கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் பாடலுக்கு இன்றும் கண்களங்கும் உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் கிளைமாக்ஸில்தான் அந்த குழந்தை சத்யராஜ் தனது அப்பா என்று தெரிந்து கொள்ளும். இந்த படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதேபோல், யூடியூப் தளத்தில் மட்டும் இந்த படத்தை, கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இந்த ரிக்ஷா மாமாவுக்கு எவ்வளவு மவுசு என்று.

லிஸ்ட்டில் புது படம்: இந்த வரிசையில் பல படங்களை பட்டியலிடலாம். அப்படி இந்த வரிசையில் மொத்த தமிழ் சினிமாவிலும் தற்போது கடைசியாக வந்து சேர்ந்துள்ள படம் சூரியின் மாமன். இந்த படத்தின் கதையை அவர் எழுதியது மட்டும் இல்லாமல், நடிக்கவும் செய்தார். படத்தை பார்த்த பலரும் 'யெப்பா முடியல' என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்படி சொல்பவர்கள் ஜென் சீ கிட்ஸ்களின் மனநிலையில் இருப்பவர்கள் என்று எல்லாம் கூட கருத்துகள் பரவலாக இருந்தது. இப்படி இருக்கையில் படத்தை கொண்டாடிய பெரும்பாலான ரசிகர்கள் தங்களது குடும்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்று கூறினார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே படம் பார்த்த பல பெண்களும் குழந்தைகள் தொடர்பான விடியோக்கள் இணையத்தில் இப்போதும் உள்ளது. படமும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமா தொடர்ந்து மாமன்களை கொண்டாடி வருகிறது. அதற்கு என தனி ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள். தமிழ் சினிமா என்றைக்கும் மாமன்களை கொண்டாடட்டும்.. மாமன்களும் திரையை அலங்கரிக்கட்டும்.


Click it and Unblock the Notifications











