twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி

    மகாபாரதமாய் இவர் திரைப்படங்களில் குடும்பச் சண்டை வரும். இவரே அதை கிருஷ்ணராய் தீர்த்தும் வைப்பார். பல படங்களில் பிரச்சனை உருவாக்கியும் அதைத் தீர்ப்பார். கடைசியில் இவரையே ஓரம் கட்டி சண்டை போட்டவர்கள் சே

    |

    சென்னை: இயக்குநரும் நடிகருமான விசு பற்றி கவிஞர் வைரபாரதி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் விசுவின் நாடகம் தொடங்கி சினிமா பயணம் வரை எழுதியுள்ளார்.

    ஆடத் தெரிந்தவன் முட்டுச் சந்தில் சுவரையே ஸ்டெம்பாக்கி அதில் பால் படாமல் சிக்ஸ் அடிப்பான். ஆடத் தெரியாதவன் மைதானத்தில் கூட மண்ணைக் கவ்வுவான். தொழில் நுட்பம் முழுமையாக வளராத காலத்தில் கலை தன் பிம்பங்களை சரித்திரங்களாக்கியது.

    Tamil Cinema Poet Vaira Bharathi writes about Vishu

    நாடக மேடை சினிமாவின் தாய். அந்தத் தாய் ஆரோக்கியமான, மிகவும் திறமையான குழந்தைகளையே சினிமாவுக்கு வழங்கினாள். பல ஆர்வக் கோளாறுகள் இப்போது சம்பாதிக்க மட்டுமே வருகின்றன..

    காற்றைக் கிழித்து வருபவர்களுக்கும் காற்றால் கோபுரத்தில் ஏறியவர்களுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன.

    அப்படி நாடக மேடையில் இருந்து வந்த ஆரோக்கியமான மிக மிக நேர்த்தியான புத்திசாலி செல்லப் பிள்ளை விஸ்வநாதர்.

    விஸ்வநாதன் என்று சொல்ல அவர் மேல் வைத்திருக்கும் கொள்ளை ரசனை இடம் கொடுக்க மறுக்கிறது

    நேர்த்தி என்ற சொல்லாடலே நேரம் என்ற சொல்லில் இருந்து வந்தவையோ என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு

    விநாடிகளில் வார்த்தைகளால் விளையாடும் சூட்சும அறிவுக்கு இவரே ஹோல் சேல் டீலர்

    இந்த இதய வியாபாரியே நமக்கு எப்படி குடும்பம் நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்

    ஒரு குடும்பம் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் சினிமாவில் நடத்திக் காட்டியவர்.

    பாடல் வழி சினிமாவை வசன வழி சினிமாவாக அறுபதிகளில் மடைமாற்றினர்

    அப்போது பேசினால் கூட சுதியோடு பேசினர். அதன் பிறகு ஒரே உணர்ச்சிவசப்பட வைக்கும் வசனங்கள் கத்திக் கத்திப் பேசிக் கொண்டிருந்தனர்.

    திரு.ஸ்ரீதர் வந்த பிறகு கதைக்கரு ஒளிப்பதிவின் கோணங்கள் வித்தியாசப்பட்டன. இதயப் பிழிவு இல்லாமலும் இல்லை.

    இதயத்தை ஏன் பிழிய வேண்டும். அதைத் தான் வாழ்க்கை செய்து கொண்டிருக்கிறதே என காமெடி சினிமாவும் வரத் தொடங்கின.

    பாலச்சந்தரின் பால காண்டங்கள் வித்தியாசமானவை தான். அற்புதமான கலை கையிருப்புகள் தான் என்ற போதும்.

    மையக்கரு திரு கே.பி அவர்கள் பிற மொழிப் படங்களில் இருந்து எடுத்து தன் இயக்க ஆளுமையால் தனதாக்கிக் கொண்டார்.

    அவருக்குப் பிறகு வந்த இந்த விஸ்வநாதர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் மனசாட்சியாக இன்றுவரை திகழ்கிறார்.

    திரு கே.எஸ்.ஜி வசனங்களில் ஆளுமை இல்லாமல் இல்லை

    ஆனால் விஸ்வநாதரிடம் வெரைட்டி இருந்தது

    திரு.கே.பி அவர்கள் விஸ்வநாதர் எனும் பெயரைச் சுருக்கி விசு என முன் மொழிந்தார்.

    திரு.விசு ஏற்கனவே நாடகத்தில் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தார்.

    பல படங்களுக்குக் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

    விசு புயல் சினிமாவில் அடிக்க ஆரம்பித்த பிறகு சினிமாவின் முகம் மாறியது.
    அதற்குக் காரணம் அதன் அகம் மாறியது.

    அவரின் திரைக்கதை வசனம் சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லலாம்.

    தில்லு முல்லு ஆல் டைம் அல்வா.

    கோதுமையில் கிண்டுவதை விட காற்றில் கிண்டுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.

    தேங்காய் சீனிவாசன் ஒரு பார்டிக்கு சென்றிருப்பார்.
    விதவை சௌகார் ஜானகி அந்த இடத்தில் பொட்டோடும் பட்டோடும் காட்சி அளிப்பார்.
    கடுப்பாகி சந்தேகப்பட்டு பின்னால் செல்வார்.
    அந்த வழியில் ஒரு பேரர் சார் பிராண்டி ஆர் விஸ்கி என்று தட்டோடு வந்து கேட்பான்.

    ஒரே ஒரு பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே கடுப்பான தேங்காய் சொல்வார்.
    நான் காந்தி டா என்பார்.
    இதான் விசு டச்.

    ஆழமான எழுத்தாளன் சுருங்கச் சொல்லி பொருள் விளக்குவதில் வில்லனாக இருக்க வேண்டும்.

    அதில் வில்லாதி வில்லர் திரு விசு.

    சார் இங்க நேரு டிரஸ் விக்கிறீங்களா.
    அவரு கொள்கையத் தான் வித்துட்டோம்.. டிரஸ்சையுமா.

    சௌகார் தேங்காய் ரஜினியை இன்னமும் மறக்க முடியாததற்கு திரு விசுவின் வசன வீச்சே காரணம்.

    இதன் திரைக்கதை வசனங்கள் எழுத அவருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு வாரம் தான்.

    அவர் வெளி நாடு போகவில்லை. இருபத்தைந்து பேரோடு கதையை டெவலப் செய்கிறேன் என ஊட்டியில் ரூம் புக் செய்து நீச்சலடித்து தயாரிப்பாளரின் தொண்டைச் சங்கை பெயர்த்து எடுக்கவில்லை.

    ஊற்று நதி திரு விசு எனும் விசித்திரக் கடல் தில்லு முல்லு திரைப்படம் ஒரு காவியம்.

    பிறகு தலைவர் தான் நாடகமாய் அரங்கேற்றிய ஒரு கதையில் தானே திரைக்கதை எழுதி நடிக்கிறார்.

    அந்தக் கதாப்பாத்திரத்திற்கு சிவாஜி அவர்களோ திரு தேங்காய் சீனிவாசனோ நடிக்க வைக்கலாம் என அறிவுரை சொல்கிறார்.

    இந்தக் கதையில் அந்தப் பாத்திரத்தில் நீ நடிப்பதாக இருந்தால் கதையை படம் இயக்கக் கொடு என்கிறார் விசுவின் தம்பி திரு கிஷ்மு.

    அந்த கதாப்பாத்திரம் திரு விசுவை தவிற எவர் செய்திருந்தாலும் தேறாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    அந்த கதாபாத்திரத்தில் புத்திசாலித் திமிரும், அலட்சியப் போக்கும், நக்கல் நையாண்டியும், கூடவே சித்தர் மனோ நிலையும் இருக்கும்.

    ஒன்றுக்கொன்று முரணான மன இயல்புகள் கொண்ட குணாதிசயங்கள். பாலுக்கு பால் சிக்ஸர் அடித்திருப்பார்.

    அந்தக் கதையில் உள்ள ஒண்டு குடித்தனத்தில் ஒருவர் புதிதாக குடி வருவார் குரியோகோஸ் ரங்கா பார்க்க பாவம் போல நொந்தவனாய் நடித்திருப்பார்.
    இவரை அங்கே குடியிருப்பவர்கள் சூழ்ந்து கொள்வர்.

    கல்யாணம் ஆயிடுச்சா இது தலைவர் விசு. மூணு கொழைந்தைங்க என விரல்களை காட்டுவார் ரங்கா. அது சரிய்யா கல்யாணம் ஆயிடுச்சா.
    மீண்டும் நையாண்டி கேள்வி. இப்படியே காட்சி சுவாரஸ்யமாய் கிணற்றடியில் வசனத்தில் நகரும். ரங்கா அவர்களும் கூச்சப்பட்டு பயந்து பதில் சொல்ல முடியாமல் திணருவார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி என்ன ஜாதி. ஏழை என்று பரிதாபமான குரல் தொனியில் ஒரே ஒரு பதிலில் அனைவரின் நாக்கிலும் ஃபெபிகால் தடவுவார் ரங்கா. விசு வின் கையில் உள்ள சொம்பு பதறி கீழே விழும் அதன் சத்தத்தோடு.
    ஷாட் கட்.

    நீட்டி முழங்கும் படியான வசனங்கள் அதில் இருக்காது. குடும்பம் ஒரு கதம்பம் இன்னொரு காவியம்.

    என்னடா இவன் எல்லாவற்றையும் காவியம் என்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்.
    மீண்டும் நகல் எடுக்க முடியாத சாகாவரம் பெற்ற இலக்கியத்தையே காவியம் என்றனர்.

    நோ டவுட் அது காவியமே.

    நெத்திப் பொட்டில் அடிப்பதைப் போன்ற வசனங்கள் எழுதுவதிலும் சீன் கம்போசிங்கிலும் ஜித்தர் விசு.

    திரைப்பட இயக்குநராக விசு இயக்கும் முதல் படம். எனக்கா காமெடி வராது என காட்சிக்குக் காட்சி காற்றலையை சிரிப்பலையாக மாற்றி இருப்பார்.

    அந்தப் படத்தில் எதைச் சொல்வது என யோசித்தால்.. எல்லா காட்சியையும் சொல்ல வேண்டும் போலவே ஆர்வப்படுகிறேன்.

    மணல் கயிறால் என்னை நான் கட்டிக் கட்டியே என் துக்கக் கடலில் இருந்துத் தப்பித்திருக்கிறேன்.

    அவர், கதை எனும் தண்டவாளம் தாண்டாத பறவை.

    ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு குணம் வைத்திருப்பார்
    ஒரு உடல் மொழி வைத்திருப்பார். உச்சகட்ட காட்சியில் ஒரு அழுத்தம்.

    கதை தொடரும் எனும் படியான ஒரு கடைசி ஷாட்.

    இது சினிமா அல்ல நம் வாழ்க்கை என்பதை அழுத்தம் திருத்தமாய் உணர வைப்பார்.

    எனக்கு வெறும் விசு என எழுத கை வரவில்லை ஆக திரு விசு என்றே தொடர்கிறேன்.

    திகட்டாத ருசியான விசு என்பதே என் அளவில் திரு விசு

    எதார்த்தவாதி இந்தத் கலை தீவிரவாதி

    ராமாயணமாய் ஒரு கோடு கிழித்து சம்சாரம் அது மின்சாரம்.

    பையன் என்ன படிக்கிறான்.
    பையன் தேறாத முட்டாள் என்பதை இப்படிச் சொல்வார்
    பையன் பிளஸ் டூ படிச்சான், படிக்கிறான், படிப்பான்,
    திரு விசு டச்.

    மகாபாரதமாய் இவர் திரைப்படங்களில் குடும்பச் சண்டை வரும்.
    இவரே அதை கிருஷ்ணராய் தீர்த்தும் வைப்பார். பல படங்களில் பிரச்சனை உருவாக்கியும் அதைத் தீர்ப்பார்.

    கடைசியில் இவரையே ஓரம் கட்டி சண்டை போட்டவர்கள் சேர்ந்துவிடுவர்.

    அடப்பாவிகளா என நாம் இங்கே சொல்வதற்குள் கவலையே படாமல் அடுத்த குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க கிளம்பி விடுவார்.

    திரு விசு ஏற்ற கதாபாத்திரங்கள் எதையும் எதிர்பார்த்ததே இல்லை.

    நிற்க.

    இதைத் தான் நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது.

    புத்திசாலித்தனமாய் பிரச்சனைகளை அணுகுவார். கன்வின்சிங்காய், பிறர் ஏற்கக் கூடிய வகையில் புரிய வைப்பார். சொல் தெளிவு தீர்க்கம்.
    எந்த சொற்களில் அழுத்தம் வேண்டுமோ அதை அழுத்துவார்.

    மொழி எனும் தகவல் கடத்தியை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இதயத்தில் ஊஞ்சலிட்டு ஆடியவர் திரு விசு.

    சீரியஸ் என்றால் வேறொரு வசன பாணி. காமெடி என்றால் வேறொன்று.

    மீராவுக்கு பிறகு கண்ணா என்று அடிக்கடி அழைத்தது இவர் மட்டுமே. என்னடா கண்ணா நான் சொல்றது ரைட் தான.

    சிவாஜி போல் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கெட் அப் ஒவ்வொரு உடல் மொழி. விசு எனும் குடும்பக் கோட்டையின் இரண்டு தூண்கள்
    ஒருவர் இவரின் அண்ணன் நடிக மேதை திரு ராஜாமணி. இன்னொருவர் தம்பி கிஷ்மு. பரதனாய் நடுவில் பிறந்த வரதன் இவர்.

    நடிகர் திரு ராஜாமணி அவர்களைப் பற்றியும் அவரின் உதவும் குணம் பற்றியும் அவரின் தைரியம் பற்றியும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்.
    நடிகர் கிஷ்முவின் நடிப்பியல்பை நிர்வாகத் திறமையை நேர்கொண்ட பேச்சை நாளெல்லாம் கொண்டாடலாம்.

    சம்சாரம் அது மின்சாரம் நாடகமாய் பம்பாயில் முதல் நாள் அரங்கேற்றம்.
    காட்சிப்படி வீட்டை விட்டு வெளியே போடா என்ற வசனத்தை திரு விசுவின் கடைசி பையன் (படத்தில் காஜா ஷெரிஃப்) சொல்ல வேண்டும்.

    அந்தக் காட்சி
    உனக்கு இந்த அம்மையப்பன தெரியலியா. தெரியல தெரியல என்று மூத்த மகன் சொல்லிக் கொண்டே வருவார்.

    அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு டுவிஸ்ட்.

    ஆடியன்சில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து நின்று கடைசி மகன் பேச வேண்டிய வசனத்தை அவரே வீட்ட விட்டு வெளிய போடா நாயே எனப் பேசிவிடுவார். மேடையில் கடைசி மகன் தான் என்ன பேசி காட்சியை முடிக்க என முழிக்கும் ஒரு விநாடிக்குள்.

    விசு உடனே, ஊரே நம்ம சண்டைய வேடிக்கப் பாத்து உணர்ச்சிவசப்பட்டு உன்ன வீட்டவிட்டு வெளிய போக சொல்றாங்களே, அவங்களுக்கே இப்டி இருந்தா, உன்ன பெத்து வளத்த ஒரு அப்பனா எனக்கு எப்டி இருக்கும். இப்ப நான் சொல்றேண்டா வீட்ட விட்டு நீ வெளிய போ, என்று கடைசி மகன் முடிக்க வேண்டிய காட்சியை நாடகத்தில் இல்லாத வசனத்தை மிக லாஜிக்கலாக பேசி அரங்கத்தைக் கைத்தட்டலில் நிறைய வைப்பார்.
    அவரின் பிரசன்ஸ் ஆஃப் மைன்ட் அலாதியானது.

    வரவு நல்ல உறவு படத்தின் உச்சகட்ட காட்சியில், மொட்டைத் தலையுடன் வாயில் தண்ணீர் அடக்கி ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.
    அந்த முக பாவனை போதும் அவர் நடிப்பின் பேராற்றல் விளக்க.

    ஒரு டௌரி கல்யாணம்...ஒரு சிதம்பர ரகசியம்.

    இன்னொருவர் இப்படி சிக்கன சிற்பங்கள் செதுக்கி சுவாரஸ்யமாக உற்சவம் நடத்த சர்வ சத்தியமாக முடியாது. திரு விசுவுக்கு மட்டுமே அது கை வந்த கலை.

    என்ன பத்தி நீங்க எழுதினது சுவாரஸ்யமாவே கவரல, என்று அவர் என்னிடம் இதைச் சொன்னாலும் அவர் மேல் எனக்கிருக்கும் காதல் நாளுக்கு நாள் கூடுமே தவிற குறையாது. இது ஒரு ஆழமாய் நேசிக்கும் அவரின் ரசிகனின் பார்வையே.

    குசேலன் கிருஷ்ணரிடம் சென்று நானும் உன்னைப் போல் கடவுள். அகம் பிரம்மாஸ்மி என்று தத்து பித்தாக உளற மாட்டானோ அதைப்போல் நானுமொரு எழுத்தாளன் எனச் சொல்வதற்கு அவரிடம் வாய் வராது. அதை நினைத்துப் பெருமையே.

    காளைகள் ஜல்லிகட்டில் மட்டுமே கொம்பைப் பயன்படுத்த வேண்டும். வயக்காட்டில் அல்ல.
    காரணம். அவர் படங்களே எனக்கான குடும்ப இலக்கியமும், நகைச்சுவை லேகியமும். என்னிடம் இல்லாத ஒரு குடும்பத்தை அவர் திரைப்படங்களே இட்டு நிரப்புகின்றன.

    அவரின் அரட்டை அரங்கம் பற்றி சொல்ல ஆரம்பித்தால் இந்தக் கட்டுரையை விடிய விடிய எழுத வேண்டிவரும்.

    அவரின் எத்தனிப்பு. அர்ப்பணிப்பு. வசீகரிப்பு. சுவீகரிப்பு. இன்னமும் தான் படம் இயக்க வேண்டுமென்ற விஸ்தரிப்பு.

    இத்தனைப் பூக்களுமே பரப்புகிறது விசு வாசம். அதுவே அவருக்கான எனது வாழ்நாள் விசுவாசம்.

    திரு விசு எனும் இரண்டெழுத்து இதிகாசத்தை இன்னமும் சொல்கிறேன்.

    கவிஞர் வைரபாரதி.

    English summary
    Vairabarathi is an Indian film Lyricst, who has worked predominantly in Tamil movie industry he wrote about director Vishu on his facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X