ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 புதுப் படங்கள்... பட எண்ணிக்கை 170ஐத் தாண்டுகிறது!
சென்னை: அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் 20 புதுப்படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. இவற்றையும் சேர்த்தால் இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐத் தாண்டுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆண்டு முடிய இன்னும் 45 நாட்கள் உள்ளன. இந்த நாட்களில் மேலும் 20 படங்கள் வெளியாகின்றன.
சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்சா 2
‘பீட்சா 2 வில்லா', ‘ஆப்பிள் பெண்ணே', ‘ராவண தேசம்' படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் ‘பீட்சா 2 வில்லா' படம் விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான ‘பீட்சா' படத்தின் 2-ம் பாகமாக தயாராகிறது.

ராவண தேசம்
‘ராவணதேசம்' படம் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை மையமாக வைத்து தயாராகியுள்ளது. ஈழத் தமிழர் பற்றி இதுவரை வந்த படங்களில் ஓரளவு நேர்மையான படம் என்ற பெயரை ராவண தேசம் பெற்றுள்ளது.

இரண்டாம் உலகம்
வருகிற 22-ந் தேதி ‘இரண்டாம் உலகம்', ‘மெய்யழகி', ‘அப்பாவுக்கு கல்யாணம்' படங்கள் வெளியாகின்றன. ‘இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.

சேரன் படம்
வருகிற 29-ந் தேதி சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை', ‘நவீன சரஸ்வதி சபதம்', ‘மாயை', ‘விழா' ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சேரன் இயக்கியுள்ளார். சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். ‘நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார்.

ஜன்னல் ஓரம்
அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி ‘கல்யாண சமையல் சாதம்', ‘ஜன்னல் ஓரம்', ‘வேல்முருகன் போல்வெல்ஸ்', ‘குற்றாலம்' படங்கள் ரிலீசாகின்றன. ‘கல்யாண சமையல் சாதம்' படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்துள்ளார். ‘ஜன்னல் ஓரம்' படத்தில் பார்த்திபன் - விமல் நடித்துள்ளனர். கரு பழனியப்பன் இயக்கியுள்ளார்.

வேல்முருகன் போர்வெல்ஸ்
இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு, மகேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். கஞ்சா கருப்புதான் படத்தின் தயாரிப்பாளரும். எம்.பி.கோபி இயக்குகிறார்.

ரம்மி
டிசம்பர் 13-ந் தேதி விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி', விஜய் சேதுபதியின் ‘ரம்மி' மற்றும் ‘கோப்பெருந்தேவி' படங்கள் ரிலீசாகின்றன. டிசம்பர் 20-ந் தேதி ஜீவா, திரிஷா ஜோடியாக நடிக்கும் ‘என்றென்றும் புன்னகை' மற்றும் ‘சுற்றுலா' படங்கள் வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











