Autograph: 90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.. சேரனின் ஆட்டோகிராஃப் ரீ- ரிலீஸ்.. தேதி குறிச்சாச்சு..!
சென்னை: 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். சேரன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் கதை பெரும்பான்மையான 80'ஸ் மற்றும் 90'ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இந்த படம் இருப்பதால் இந்த படத்திற்கு எப்போதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்த படத்தைப் பார்த்து, அப்படியே காப்பி அடித்து, கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்ட மலையாளப் படம் என்றால் அது பிரேமம். இந்நிலையில் ஆட்டோகிராஃப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய சேரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ரீ ரிலீஸ் தேதியையும் தெரிவித்துள்ளார்.
சேரன் இயக்கி, தயாரித்து நடித்த படம் ஆட்டோகிராஃப். இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஒரு ஆண் தனது குழந்தை பருவத்தில் இருந்து, முதிர்பருவம் வரை எவ்வளவு காதல்களை எதிர்கொள்கிறான். அவை அவனுக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் யதார்த்தத்திற்கு நெருக்கமாக கூறியிருப்பார். படத்தில் சேரன் கதாபாத்திரத்திற்கு மட்டும் இல்லாமல், படத்தில் நடித்த மற்ற கதாநாயகிகள் கோபிகா, சினேகா, மல்லிகா உள்ளிட்ட அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும்படியான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படம் வெளியான கால கட்டத்தில் ஆண்கள் மட்டும் இல்லாமல், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் படத்தைக் கொண்டாடினார்கள். காரணம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த விதம், ஒரு காரணம் என்றால், படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றொரு காரணம் எனக் கூறலாம். பரத்வாஜ் மற்றும் சபேஷ் முரளி ஆகியோர் இணைந்து படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் அமைத்துள்ளார்கள்.

ஆட்டோகிராஃப்: படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒவ்வொரு பூக்களுமே, நினைவுகள் நெஞ்சினில் சுமப்பதினால், ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம் வந்தல்லோ என அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும் இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நகரங்கள் தொடங்கி கிராமங்களில், சிறு டவுன்களில் இருந்த பெரும்பான்மையான தியேட்டர்கள் மக்கள் வெள்ளம் எனத் திரண்டு இந்த படத்தை பார்த்தார்கள். ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு அழுகாத ரசிகர்கள் மிகவும் குறைவுதான்.

கௌரவம்: தமிழ் சினிமாவில் கிளாசிக் படங்களை பட்டியலிடும் போது ஆட்டோகிராஃப்படம் கட்டாயம் அதில் இருக்கும். இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு தொடங்கி மத்திய அரசு வரை விருதுகள் அளித்து கௌரவித்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை பாடிய சித்ராவுக்கும் பாடலை எழுதிய பா. விஜய்க்கும் தேசிய விருதுகள் அளிக்கப்பட்டது. இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கும் தேசிய விருது கிடைத்தது.

ரீ-ரிலீஸ்: பாராட்டுகள், விருதுகள் மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆட்டோகிராஃப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக படத்தை இயக்கி, தயாரித்து மற்றும் நடித்த இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. படத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை வரும் மே மாதம் 16ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











