போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி வழங்கணும்.. சினிமா தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை!
சென்னை: கேரளாவை போல தமிழ் சினிமாவிலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று தழிழக முதலமைச்சருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் 5 பேர் மட்டுமே பாதுகாப்புடன் கலந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

முதல்வரிடம் கோரிக்கை
இந்நிலையில் இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை.

வாழ்வாதாரம்
50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கி யுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், படங்களை தயார் செய்ய முடியும்.

நிபந்தனைகளோடு
தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, திரைப்படத்துறைக்கும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.

கட்டுப்பாடுகள்
கேரள அரசும் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. படத்தொகுப்பு, டப்பிங், கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் பின்னணி இசை, ஒலிக் கலவை உள்ளிட்ட போஸ்ட்-புரொடக்சன் பணிகளை சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்' என்று கூறியுள்ளனர்.

கடம்பூர் ராஜூ
இதில் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், கேயார், கே. முரளிதரன், டி.சிவா, பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர் உட்பட பல தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். இதே கோரிக்கையை தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தயாரிப்பாளர்கள் டி.சிவா, மனோபாலா, ஜி.தனஞ்செயன், எம்.திருமலை ஆகியோர் வழங்கினர்.


Click it and Unblock the Notifications











