‘ஊர் சுற்றி புராண’த்தை முடிக்காமல் அஞ்சலி புதிய படங்களில் நடிக்கக் கூடாது... ‘கில்டு’ வலியுறுத்தல்
சென்னை: இயக்குநர் களஞ்சியத்தின் படத்தை நடித்துக் கொடுக்காமல் நடிகை அஞ்சலி புதிய படங்களில் நடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என ஆந்திரா பிலிம்சேம்பருக்கு கடிதம் அனுப்பியுள்ளது தென்னிந்திய பட அதிபர்கள் சங்கமான கில்டு.
தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி கடந்தாண்டு தீடீரென ஒருநாள் மாயமானார். தனது தலைமறைவுக்கு சித்தி பாரதிதேவி மற்றும் இயக்குநர் களஞ்சியம் மீது குற்றம் சுமத்தினார் அஞ்சலி.

அதனைத் தொடர்ந்து, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அஞ்சலி, தற்போது மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார்.
பாதியில் நிற்கிறது...
மு.களஞ்சியம் தயாரித்து, இயக்கி நாயகனாக நடிக்கும் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் அஞ்சலி தலைமறைவானார். தொடர்ந்து களஞ்சியத்தின் அப்படத்தில் நடிக்க அஞ்சலி மறுத்ததால், அப்படம் முழுமையடையாமல் நிற்கிறது.
புகார் மனு...
இதற்கிடையே சமீபத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான மு.களஞ்சியம் அஞ்சலி மீது தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை பட அதிபர்கள் சங்கத்தில் (கில்டு) புகார் ஒன்றை அளித்தார். அதில், அஞ்சலி தனது படத்தை முடித்துக் கொடுத்த பிறகு தான் புதிய படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஊர் சுற்றிப் புராணம்...
புகாரை பெற்றுக்கொண்ட 'கில்டு' செயலாளர் ஜாக்குவார் தங்கம், ஆந்திர மாநில பிலிம்சேம்பர் தலைவர் மற்றும் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
''மு.களஞ்சியம் தயாரித்து டைரக்டு செய்யும் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி சம்மதித்ததுடன் 2013 மார்ச் மாதம் 10 நாட்கள் நடித்தார்.
மறுப்பு...
அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினை காரணமாக அஞ்சலி, 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடிக்க மறுக்கிறார்.
நஷ்டம்...
இதனால் களஞ்சியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி படம் எடுத்து வருகிறார். அஞ்சலி, 'கால்ஷீட்' கொடுக்காததால், களஞ்சியத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
புதிய படம்...
அஞ்சலி ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடிக்காமல், புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 'கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்திலும், 'தீரா ராணா விக்ரமா' என்ற கன்னட படத்திலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
தடை...
களஞ்சியத்தின் 'ஊர் சுற்றி புராணம்' படத்தை முடித்துக்கொடுக்காமல், வேறு எந்த புதிய படத்திலும் அஞ்சலி நடிக்கக்கூடாது. இதை தெலுங்கு பட அதிபர்களுக்கு தெரிவித்து, அஞ்சலி புதிய படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்' என இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் தமிழில்...
இதற்கிடையே தமிழில் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











