விடாமுயற்சியால் வந்த வினையா? சினிமாவை விட்டு வெளியேறும் திட்டத்தில் லைகா புரொடக்ஷன்ஸ்?
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது லைகா புரொடக்ஷன்ஸ். இவர்களது தயாரிப்பில் வெளியான பெருமாபாலான படங்கள் வெற்றியைக் குவித்துள்ளது. இந்த நிறுவனத்தை இலங்கையைச் சேர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜா நிறுவி படங்கள் தயாரித்து வருகின்றார். தமிழ் நாட்டில் இந்த நிறுவனம் முதன் முதலில் அறிமுகமானபோது இந்த நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது. அதைத்தொடர்ந்து பல மிகப்பெரிய கதாநாயகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களை தயாரித்துள்ளது. இருந்தாலும் லைகா நிறுவனம் தமிழில் தான் அதிகப்படியான படங்களைத் தயாரித்துள்ளது.

விஜய், ரஜினி உள்ளிட்ட உச்ச நடிகர்கள் தொடங்கி பல்வேறு நடிகர்கள் பலரது சம்பளதை பல மடங்கு உயர்த்தி கொடுத்ததில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் வணிகத்தை பல்வேறு மடங்கிற்கு உயர்த்தியதிலும் லைகா நிறுவனத்தின் பங்கு உள்ளது. இவர்களது தயாரிப்பில், கத்தி, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், கோலமாவு கோகிலா, எந்திரன் 2.0, வடசென்னை, செக்கச் சிவந்த வானம், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

பெரிய படங்கள்: இவர்களது தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருப்பது, கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் படத்தின் 2ஆம் பாகமும், ரஜ்னி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படங்கள்தான். லைகா போன்ற தயாரிப்பு நிறுவனம் இல்லை என்றால் தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களான பொன்னியின் செல்வன், செக்கச் சிவந்த வானம், இந்தியன் 2 போன்ற படங்கள் சமகாலத்தில் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும் என கூறும் பிரபலங்களும் உள்ளனர்.

அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்: இப்படியான நிலையில் லைகா நிறுவனம் படத்தயாரிப்புகளில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. லைகா போன்ற நிறுவனத்தை நம்பி கதைகளை உருவாக்கும் இயக்குநர்கள் இன்றைக்கு அதிகமானோர் இருக்கும்போது இதுபோன்ற தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சிகரமான தகவலாக பார்க்கப்படுகின்றது.

விடாமுயற்சிதான் காரணமா? மேலும் ஒரு படத்தை வெளியிட ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பொதுவாக ஒரு சில பிரச்னைகள் வருவது வழக்கம்தான். ஆனால், லைகா நிறுவனம் சமீபகாலமாக அதிகப்படியான பிரச்னைகளைச் சந்திப்பதுடன் அதிகப்படியான நஷ்டத்தையும் எதிர்கொண்டு வருகின்றது. இதுபோதாதென்று, அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பில் ஏகப்பட்ட பொருட்செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அஜித்தும் இயக்குநர் மகிழ் திருமேனியும் மாறி மாறி பிரச்னை செய்வதாலும் லைகா நிறுவனம் தனது படத்தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவினை எடுக்க ஒரு காரணமாக இருக்குமோ எனவும் பேச்சுகள் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











