எல்லாரும் சீனியர் ஆயிட்டாங்க... புது ஹீரோயின்களைத் தேடும் ஹீரோக்கள்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள், தங்கள் படங்களுக்கு புது ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது.
சினிமாவில், ஹீரோயின்களின் வாழ்க்கை சில காலம்தான். திருமணம் முடிந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். அண்ணி, அக்கா கேரக்டரில் ஆரம்பித்து அம்மா கேரக்டரில் நடிக்க அழைப்பதுதான் கோலிவுட் வழக்கம். இந்தி சினிமாவில் திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் ஹீரோயின்களுக்கு மவுசுதான்.

ஐஸ்வர்யா ராய், கஜோல், கரீனா கபூர் ஆகியோர் திருமணத்துக்குப் பின்னும் இன்னும் ஹீரோயின்களாகவே நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சீனியர் ஹீரோயின்களாகிவிட்ட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்கள். டாப் ஹீரோக்கள் இப்போது இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய்யின் பிகில் படத்தில் நடித்த நயன்தாரா, இப்போது ரஜினியின் தர்பாரில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்து வருகிறார்.
த்ரிஷாவுக்கு பெரிய ஹீரோ படங்கள் எதுவும் இல்லை. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்த அவர், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால், மும்பை சாஹா என்ற இந்திப் படத்திலும் தமிழில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். விஷாலின் ஆக்ஷன் படத்துக்குப் பிறகு தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார் தமன்னா. பரபரப்பாக படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷூக்கு தமிழில் இப்போது ஒரு படம் மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில் டாப் ஹீரோக்களில் இருந்து இளம் ஹீரோக்கள் வரை, புதிய ஹீரோயின்களையே தங்கள் படங்களுக்குத் தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகையான இவர், ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
சூர்யாவின், சூரரைப் போற்று படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் லவ்லி சிங் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கார்த்தியின், தம்பி படத்தில் நிகிலா விமல் ஹீரோயினாக நடிக்கிறார்.
தனுஷின் பட்டாஸ் படத்தில் மெஹ்ரின் பிர்ஸதா ஹீரோயினாக நடிக்கிறார். அவர் அடுத்து நடிக்கும், சுருளி படத்தில் மலையாள ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ரஜிஷா விஜயன் என்ற மலையாள நடிகை நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன், தனது டாக்டர் படத்தில், பிரியங்கா மோகனை ஹீரோயினாக்கி இருக்கிறார். இவர் மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்தவர்.
விஜய் சேதுபதியின், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படி தொடர்ந்து ஹீரோக்கள் புதிய ஹீரோயின்களை நடிக்க வைப்பது, ஏற்கனவே நடித்து சில இளம் ஹீரோயின்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே வாய்ப்பு பெறுவதற்காக, ஹீரோயின்கள் கடும் போட்டியில் இறங்குவதாகவும் கோலிவுட்டில் பேச்சு பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











