இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் என்ன தெரியுமா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு
சென்னை: தியேட்டர்களில் படங்கள் ரிலீஸானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கடந்த வருடத்தில் தமிழில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸானாலும் அதில் சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க இந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
சினிமா என்பது இந்தியாவில் ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள், இயக்குநர்களின் படங்கள் ரிலீஸானால் ரசிகர்களுக்கு அந்த நாளோ அல்லது அந்த வாரமோ முழுக்க முழுக்க திருவிழாதான். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தால் தங்களது வாழ்க்கையில் நாட்களே நகரும் என்று இருக்கும் கூட்டமும் உண்டு. அதேசமயம் தற்போது ஓடிடியின் வருகை அதிகரித்திருப்பதால் தியேட்டர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகவும் அபாய குரல்கள் கேட்கின்றன.
பெரிய அளவில் ஹிட் இல்லை: ஆனால் தியேட்டர்களுக்கு ஓடிடியால் அழிவில்லை; தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்களே ஆப்பு வைக்கும்படி அமைந்துவிடுகின்றன. படங்கள் நன்றாக இருந்தால்தானே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என்பதும் ஒருதரப்பினரின் கருத்தாக இருக்கிறது. கடந்த வருடத்தி தமிழில் ஏகப்பட்ட படங்கள் வந்தாலும் பெரிய எண்ணிக்கையிலான படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டடிக்கவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்: சூழல் இப்படி இருக்க இந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம். பிப்ரவரி 13ஆம் தேதி ராஜுமூருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் மை லார்ட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் ஹீரோயினாக சைத்ரா நடித்திருக்கிறார். குக்கூ, ஜோக்கர் என ராஜுமுருகன் இயக்கிய படங்கள் தனித்துவமானவை. எனவே இந்தப் படமும் அதே மாதிரி இருக்குமா என்ற ஆவல் எழுந்திருக்கிறது. இதுவரை படம் பார்த்த மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். எனவே கண்டிப்பாக படம் தரமாக இருக்கும் நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் பூக்கி: அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பூக்கி திரைப்படமும் வெளியாகிறது. இந்தப் படத்தை அஜய் திஷன் என்பவர் இயக்கியிருக்கிறார். இதுவரை படத்திலிருந்து வெளியான அப்டேட்டுகள் எல்லாம் தரமான ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. இது விஜய் ஆண்டனிக்கு ஹிட் படமாக அமையுமா இல்லை பத்தோடு பதினொன்றாக மாறிவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அர்ஜுன் மகள் நடிக்கும் சீதா பயணம்: அர்ஜுன் இயக்கத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருக்கும் படம் சீதா பயணம். நீண்ட வருடங்கள் கழித்து ஆக்ஷன் கிங் இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதால் எப்படிப்பட்ட படமாக இது இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்துக்கு அனூப் இசையமைத்திருக்கிறார்.
ஆண்ட்ரியாவின் கா: பின்னணி பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கும் படம் கா. நாஞ்சில் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்தது. கடைசியாக ஆண்ட்ரியாவுக்கு மாஸ்க் படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. எனவே அதே ரிசல்ட்டை இப்படமும் பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் அஜயன் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் மைலாஞ்சி, ராஜசேகர் இயக்கத்தில் ஸ்வீட்டி பியூட்டி நாட்டி படங்களும் அன்றைய தினம் ரிலீஸாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











