சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
தமிழ் சினிமாவில் இந்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் பல வருடங்கள் கழித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதி சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
தமிழ் சினிமாவில் சிறுபட்ஜெட் படங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி மற்றும் தியேட்டர்கள் கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினை. பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுடன், ஒரு சில சிறுபட்ஜெட் படங்களும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படும் போது, அந்த படங்கள் இயல்பாகவே நஷ்டத்தை சந்திக்கின்றன. இதனால் அந்த சிறு தயாரிப்பாளர்கள் சினிமா துறையில் இருந்து காணாமல் போகும் நிலையே நீடிக்கிறது.

இதற்கு தீர்வுகாணும் வகையில் தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான், மே 25ம் தேதி ரூ.4 கோடி பட்ஜெட்டுக்கு குறைவான படங்களை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே25ம் தேதி அதர்வா நடித்துள்ள செம போத ஆகாத படம் வெளியாக இருந்தது. ஆனால் சிறுபட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக்கொண்டதை அடுத்து, அதர்வா தனது பட ரிலீஸை ஜூன் மாதம் 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இதற்காக அவருக்கு விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அதன்படி வரும் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதியன்று, ஒரு குப்பைக் கதை, செம, காலக்கூத்து, திருப்பதிசாமி குடும்பத்தார், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க ஆகிய ஐந்து படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. பரத் நடித்துள்ள பொட்டு படமும் மே 25ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தின் ரிலீசும் தள்ளிப்போகும் என தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையால் சிறு தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் விவேக், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் விஷாலை பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











