முதலமைச்சர் ஸ்டாலின் பயோபிக்.. முருகதாஸ் சொல்வது என்ன?.. இவர்தான் ஹீரோவா?
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கலாம் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அதில் யார் ஹீரோவாக நடிக்கலாம் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.
தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் அஜித்தை வைத்து முதல் படத்தை இயக்கினார். அந்தப் படம் அஜித்திற்கு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தை வலுவாக பெற்றுக்கொடுத்தது.

விஜயகாந்த்துடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
இதனையடுத்து விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க போராடும் ஒரு பேராசிரியராக விஜயகாந்த் நடித்திருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. மேலும், விஜயகாந்த்தை வித்தியாசமாக முருகதாஸ் காட்சிப்படுத்தியிருக்கிறார் எனவும் பாராட்டு குவிந்தது. இப்படத்துக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவர் ஆனார்.

முருகதாஸ் கொடுத்த அடுத்த மெகா ஹிட்
முதல் இரண்டு படங்களும் ஹிட்டாக மூன்றாவது படமாக சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார் முருகதாஸ். ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் உடைய ஹீரோ என்ற ஒன்லைனை வைத்து அந்தப் படத்தில் அதகளம் செய்திருப்பார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் மெகா ஹிட்டான அந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது. அதனையும் முருகதாஸே இயக்கினார்.

விஜய்யுடன் இணைந்து இரண்டு ப்ளாக் பஸ்டர்கள்
இப்படிப்பட்ட சூழலில் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார் முருகதாஸ். பெரும் வெற்றி பெற்ற அந்தப் படமானது விஜய்ய்க்கு மாஸ் கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கினார். இந்தப் படமும் மெகா ஹிட்டானது. இப்படி விஜய்க்கு தொடர்ந்து இரண்டு ப்ளாக் பஸ்டர்களை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.

தோல்வி முகத்தில் முருகதாஸ்
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் ஒருகட்டத்தில் தோல்வி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய ஸ்பைடர் சுமாரான வரவேற்பைப் பெற; ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியடைந்தது. அதனையடுத்து முருகதாஸின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அவருக்கு கால்ஷீட் கொடுக்கவே ஹீரோக்கள் அஞ்சுகிறார்கள் எனவும் பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாவது ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயோபிக் - முருகதாஸ் சொல்வது என்ன?
இந்நிலையில் முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மு.க. ஸ்டாலின் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் அறிந்திருந்த அந்த விஷயத்தை இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்க்கும்போது அவருடன் பயணித்த உணர்வை கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் இந்த் அ வரலாற்று பதிவை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

ஸ்டாலின் குறித்து நினைத்து நெகிழ்ந்துபோனேன்
தனது தந்தை இறந்த பிறகு அவர் எழுதிய கடிதத்தை படிக்கும்போது நெகிழ்ந்துபோனேன். சிறிய வயதிலேயே இளைஞரணிக்கு பொறுப்பேற்றிருக்கிறார். பெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் தனக்கென போராட்டத்தை அமைத்து அதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த கண்காட்சியை பார்க்கும்போது அவரது வாழ்க்கையை இந்திய அளவில் ஒரு பயோபிக்காக எடுக்கலாம் என்ற இன்ஸ்பிரேஷன் உருவாகிறது" என்றார்.

ஸ்டாலின் பயோபிக்கில் யார் ஹீரோ?
முதலமைச்சர் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கலாம் என முருகதாஸ் கூறியதை அடுத்து அதில் யார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே ஏற்கனவே இதுகுறித்த பேச்சு எழுந்தபோது சமுத்திரக்கனிதான் மு.க. ஸ்டாலினாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இப்போது உதயநிதி மு.க.ஸ்டாலின் பயோபிக்கில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்துவருகின்றனர். மேலும் இதனை முருகதாஸே இயக்கினால் என்ன என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











