போதை பொருள் பயன்பாடு.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை.. லோகேஷ் கனகராஜ் திருந்துவாரா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: திருத்தணியில் மின்சார ரயிலில் போதையில் இருந்த நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞர் ஒருவரை வெட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஓரளவு அந்த இளைஞர் நலம் பெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைத்துறையினருக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
திருத்தணியில் மின்சார ரயில் ஒன்றில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது வேலைகளை முடித்துவிட்டு; இருக்குமிடத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில்; அந்த இளைஞரிடம் கையில் அரிவாளுடன் ரீல்ஸ் எடுக்க முற்பட்டார்கள். அரிவாளை கீழே போடுங்கள் என வடமாநில வாலிபர் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள்; ரயில் நின்ற பிறகு அவரை ஆள் இல்லாத இடத்துக்கு இழுத்து சென்று வெட்டினார்கள். வெட்டிய கொடூர செயலையும் வீடியோ எடுத்தார்கள்.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள்: இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் செய்த சிறுவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டாலும்; தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். அதேபோல் திரைத்துறையிலிருந்து மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோரும் இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தார்கள்.

போதை புழக்கம் அதிகம்: மேலும் இதே மாதிரி தமிழ்நாடு முழுவதும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் போதை புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதுதான் காரணம். கஞ்சா, போதை ஊசி என அத்தனை போதை வஸ்துக்களும் தாராளமாகவும், எளிதாகவும் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு இனியாவது போதை பொருட்கள் புழக்கத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பலர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
சிக்கிய லோகேஷ் கனகராஜ்: இது ஒருபக்கம் இருக்க இன்னொரு தரப்பினரோ; போதை பொருள் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களில் போதை பொருட்கள் பயன்பாடு, வெட்டு, குத்து, ரத்தம் ஆகியவைகளை வைத்து ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. அந்த மாதிரியான படங்களை லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து எடுக்கிறார். அவர் மட்டுமின்றி வெற்றிமாறன் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் அரசன் படமும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை மையப்படுத்திதான் உருவாகிறது. தமிழ் சினிமா இயக்குநர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என குரல்கள் கேட்கின்றன.
முதலமைச்சர் கோரிக்கை: இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைத்துறையினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "போதை பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பு. கலைத்துறையை சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். அதன் பயன்பாட்டை பெருமைப்படுத்தக்கூடாது. இளைஞார்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருளை ஒழிக்க; அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு பயன் கிடைத்திருகிறது' என்றார்.
ரசிகர்கள் கேள்வி: இதை பார்த்த ரசிகர்களோ, இத்தனை நாட்கள் பலரும் இதை ஓயாமல் சொல்லிவந்தார்கள். இப்போது மாநிலத்தின் முதலமைச்சரே வெளிப்படையாக சொல்லிவிட்டார். இனியாவது லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து படத்தை கொடுப்பார்களா என கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











