என் மேல் பழியா? ஸ்டாலின் சார்? எனக்கு தைரியும் இருக்கு..உங்களுக்கு ஒரு டேஷும் இல்ல.. முதல்வர் பேச்சு
கரூர்: கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்றுள்ளார். புதிய தொழில்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கும் முக்கிய நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரில் கரூர் சென்று அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதில், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும், அவனது மனதளவில் இருக்கும் காயங்களை எளிதில் மறக்க முடியாது இல்லையா? எல்லாரும் அப்படித்தான்.. எனக்கும் அப்படித்தான். பல வலிகளைத் தாண்டித்தான் நான் இன்று இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். ஆனால், என் மனதளவில் என்னை மிக அதிகமாகக் காயப்படுத்தியது இந்த கரூர் சம்பவம் தான் .மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்று நாம் பயணத்தைத் தொடங்கி நாகப்பட்டினம், திருச்சி எனச் சென்றுகொண்டிருந்தோம். அரியலூரில் கூட்டத்தை முடித்துவிட்டுப் பெரம்பலூர் போவதற்கு முன்னால், போலீசார் எங்களை எச்சரித்தார்கள். நேரமாகிவிட்டது, வராதீங்கள்' என்று சொன்னார்கள். அதனால் பெரம்பலூர் தொகுதி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்.

யார் காரணம்: அதேபோல, நாமக்கல் கூட்டத்தை முடித்துவிட்டுக் கரூர் வரும்போது கரூர் போலீசார் எங்களை முன்கூட்டியே எச்சரித்திருக்கலாமே? அளவுக்கு அதிகமாகக் கூட்டம் இருக்கிறது, இந்த இடத்திற்கு வர வேண்டாம் என்று எங்களைத் தடுத்திருக்கலாம். போலீஸ் நினைத்தால், ஏதோ அசம்பாவிதம் தவறாக நடக்கப் போகிறது என்று கருதினாலே, கூட்டத்தை ரத்து செய்வதற்கான எல்லா அதிகாரமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் செய்யாமல், நெடுஞ்சாலையிலிருந்து போலீசாரே எங்களைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேராக அழைத்து வந்தார்கள். அது ஒரு மிகப்பெரிய நாடகம். அதை நான் முழுமையாக நம்பிவிட்டேன். அன்றைக்கு அந்தக் கரூர் கூட்டத்தில் போலீசாருக்கு நன்றி கூடச் சொன்னேன். ஆனால், எனக்குத் தெரியாது, பின்னணியில் இப்படி ஒரு நாடகம் இருக்கும் என்று. இதற்கெல்லாம் யார் காரணம்? இதையெல்லாம் யார் சொல்லிச் செய்தார்கள்? இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள்; ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் இப்படித் திருப்புங்கள் என அவர்களுக்குப் பின்னாலிருந்து உத்தரவிட்டது யார்?
அரசியல் செய்கிறார்: இந்தக் கூட்ட நெரிசலில் என் அக்கா, தங்கைகளின் குழந்தைகளை நாம் இழந்துவிட்டோம். இவ்வளவு வலி, இவ்வளவு காயங்களை எனக்குக் கொடுத்துவிட்டு, பழியைத் தூக்கி என் மீது போடுகிறீர்களே, இது என்ன நியாயம்? அதில் ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிறீர்களே. சட்டசபையில் ஸ்டாலின் சார் பழியை நம்ம பக்கம் திருப்பிவிட்டு அதிலும் அரசியல் செய்கிறாரே, இதில் என்ன நியாயம் இருக்கிறது?எனக்காக வரும் மக்களைக் காக்க வைக்கும் அளவிற்கு நான் ஆதாயம் தேடும் அரசியல்வாதி கிடையாது. மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். எனக்காக எல்லாத்தையும் கொடுத்த என் மக்களுக்காக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்
நிரந்தர சம்மட்டி அடி தேவை: நமக்கு இவ்வளவு பெரிய காயங்களைக் கொடுத்த அவர்களுக்கு, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சரியான பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டுமே போதாது. கால காலத்திற்கும் அவர்களால் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு, ஒரு நிரந்தரமான பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டும். அப்படியெல்லாம் பழி சுமத்தினால் நான் மக்களை விட்டு ஓடிவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? ஒரு காலமும் நான் என் மக்களை விட்டு ஓடமாட்டேன். அன்றைக்கும் சொல்கிறேன், இன்றைக்கும் சொல்கிறேன்.. பணமா? ஜனமா? எனக் கேட்டால் எனக்கு என்றுமே ஜனம்தான் முக்கியம்! மக்களே.. உங்களை விட எனக்குக் காசு, பணம் எல்லாம் முக்கியமா என்ன? இவ்வளவு குறைகளை நம்மீது சொல்கிறார்களே.. நான் சொன்னது போல, அவர்களால் எல்லா விஷயத்தையும் இப்படி மக்களிடத்தில் ஓப்பனாகப் பேச முடியுமா? அந்தத் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? ஒரு டேஷும் கிடையாது. நம் மக்கள் அமைத்துக் கொடுத்த இந்த நல்ல அரசை, டிசைன் டிசைனாக, மாடல் மாடலாகக் குறைகள் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்று முதல்வர் விஜய் கரூரில் மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.


Click it and Unblock the Notifications